அவன் – இவன் பட வழக்கு: இயக்குனர் பாலா விடுவிப்பு

அவன் – இவன் படம் தொடர்பான வழக்கிலிருந்து இயக்குனர் பாலா விடுவிக்கப்பட்டுள்ளார். பாலா இயக்கத்தில் விஷால், ஆர்யா நடிப்பில் 2011ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அவன் – இவன். படத்தில் நெல்லை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற…

அவன் – இவன் படம் தொடர்பான வழக்கிலிருந்து இயக்குனர் பாலா விடுவிக்கப்பட்டுள்ளார்.

பாலா இயக்கத்தில் விஷால், ஆர்யா நடிப்பில் 2011ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அவன் – இவன். படத்தில் நெல்லை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சொரிமுத்து அய்யனார் கோவில், சிங்கம்பட்டி ஜமீன் குறித்து அவதூறாக சித்தரித்ததாக இயக்குனர் பாலா மற்றும் ஆர்யா மீது வழக்கு தொடரப்பட்டது. சிங்கம்பட்டி சமஸ்தானத்தைச் சேர்ந்த சங்கராத் மஜன் தரப்பில் இந்த வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. நடிகர் ஆர்யா நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியதால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். விசாரணை முடிந்து தீர்ப்பு நேற்று வெளியாக இருந்த நிலையில் இயக்குனர் பாலா ஆஜராகவில்லை. இதனால் இன்று பாலா கண்டிப்பாக ஆஜராக வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதி, தீர்ப்பும் இன்று வழங்கப்படும் என்று அறிவித்தார்.


இந்த நிலையில் அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் பாலா இன்று ஆஜரானார். அப்போது, மனுதாரர் குற்றச்சாட்டை முறையாக நிரூபணம் செய்யாத காரணத்தால் இயக்குனர் பாலாவை வழக்கில் இருந்து விடுவித்து நீதித்துறை நடுவர் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்தார். இதுதொடர்பாக பேட்டியளித்த பாலா, பொய் வழக்கில் இருந்து விடுதலை செய்ததற்கு நன்றி என்றார்.

ஆனால், சிங்கம்பட்டி இளையஜமீன் சங்கராத் மஜனிடம் ஆலோசனை பெற்று மேல்முறையீடு செய்ய உள்ளதாக இயக்குனர் பாலா மீது வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.