சென்னை தியாகராய நகரில் உள்ள காஞ்சிபுரம் வர மகாலட்சமி கடையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரத்தில் பிரபலமாக இயங்கி வரும் காஞ்சிபுரம் வர மகாலட்சுமி சில்க்ஸ் நிறுவனத்தின் கிளை சென்னையிலும் செயல்பட்டு வருகிறது. இது சாய் சில்க்ஸ் காலா மந்திர் குழுமத்தின் விற்பனையகம் ஆகும். இந்த விற்பனையகத்தின் கீழ் “காலா மந்திர்”, “மந்திர்”, “காஞ்சிபுரம் வரமஹாலக்ஷ்மி சில்க்ஸ்” மற்றும் “கே எல் எம் ஃபேஷன் மால்” என்ற பிராண்ட் பெயர்களில் பெண்களுக்கான பிரத்தியேக சேலை விற்பனை நடைபெற்று வருகிறது.
இந்த குழுமத்திற்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட பகுதிகளில் 60க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. சென்னையில் மயிலாப்பூர், அண்ணா நகர், பாண்டி பஜார் ஆகிய இடங்களிலும் துணிக்கடைகள் உள்ளன. இந்த அனைத்து கடைகளிலும் வருமான வரித்துறையினர் இன்று திடீரென சோதனை மேற்கொண்டனர்.
தமிழகத்தில் காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் அருகே உள்ள வரமஹாலக்ஷ்மி பட்டு சேலை கடைகளில் வருமான வரி துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் சென்னை தியாகராய நகரில் உள்ள காஞ்சிபுரம் வர மகாலட்சுமி துணி கடையில் காலை 9 மணி முதல் வருமான வரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் 5 பேர் கொண்ட குழு சோதனையில்.ஈடுபட்டு வருகிறார்கள்.
அதிகப்படியான லாபத்தை மறைத்து வரி ஏய்ப்பு செய்ததன் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா







