பங்காரு அடிகளாரின் சித்தர் பீடத்தில் ஏற்றப்பட்ட ஜோதி விளக்கு – பக்தர்கள் தரிசனம்

மேல்மருவத்தூரில் அமைந்துள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஜோதி விளக்கு ஏற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் நேற்று முன்தினம் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு…

மேல்மருவத்தூரில் அமைந்துள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஜோதி விளக்கு ஏற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் நேற்று முன்தினம் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். ஆயிரக்கணக்கான பக்தர்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து அவருக்கு அஞ்சலி செலுத்திச் சென்றனர்.

இதனை அடுத்து நேற்று மாலை அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் கருவறை அருகே, அருள்வாக்கு கூடத்தின் மேற்கு திசையில் தோண்டப்பட்ட குழியில், புற்று மண்டப பகுதியில் வில்வம், உப்பு, திருநீறு, தர்பை, குங்குமம் மற்றும் ஐம்பொன் உள்ளிட்ட 18 வகையான பூஜைப்பொருட்கள் இடப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இதையும் படியுங்கள் : பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் – உள்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்டோருக்கு ஆர்.எஸ்.எஸ். நோட்டீஸ்

தொடர்ந்து இன்று காலை சித்தர் சமாதியில், பங்காரு அடிகளாரின் இளைய மகனான செந்தில் குமார், பாலாபிஷேகம் செய்தார். கற்பூரம் மற்றும் நெய் தீபம் காட்டப்பட்டு, சூரைத் தேங்காய் உடைத்து பூஜை செய்யப்பட்டது. பங்காரு அடிகளாரின் துணைவியார் லட்சுமி, அவரது உறவினர்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர். இதேபோல் அவரது மூத்த மகன் அன்பழகன், நேரில் வந்து மரியாதை செலுத்தினார். பின்னர் சித்தர் பீடத்தில் ஜோதி விளக்கு ஏற்றப்பட்டது. அதனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

-அ. சௌமியா அப்பர்சுந்தரம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.