எகிப்து எல்லையை நேற்று இஸ்ரேல் திறந்ததையடுத்து, போர் தொடங்கிய பிறகு காஸாவுக்குள் 20 லாரிகளில் நிவாரணப் பொருள்கள் சென்றன.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசா நகரம் உருக்குலைந்துள்ளது. ஹமாஸ் அமைப்பினரும் இஸ்ரேல் மீது சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசியும், இஸ்ரேல் நகரங்களுக்குள் ஊடுருவியும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 16வது நாளாக இன்றும் வன்முறை நீடித்து வருகிறது.
பெரும்பாலான மருத்துவமனைகள் செயல்படாமல் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. மேலும், மருத்துவமனைகள் மற்றும் சுகாதார வசதிகள் குண்டுவெடிப்புகளால் சேதமடைந்துள்ளன, செவ்வாயன்று காசா நகரில் உள்ள அல்-அஹ்லி அரபு -மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.
மருத்துவமனைகளில் மருந்துகள், உணவு, குடிநீர் இல்லாமல் குழந்தைகள், பெண்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, இஸ்ரேலுக்கு வருகை தந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் ஆகியோர் நிவாரணப் பொருள்கள் காஸாவுக்குள் செல்ல அனுமதிக்குமாறு இஸ்ரேலை வலியுறுத்தினர். இதற்கு கடந்த 18-ம் தேதி இஸ்ரேல் ஒப்புக்கொண்டாலும், எல்லை திறப்பில் தாமதம் ஏற்பட்டது. பிணைக் கைதிகளாக உள்ள 210 பேரையும் விடுவித்தால்தான் நிவாரணப் பொருள்கள் அனுமதிக்கப்படும் என்பதில் இஸ்ரேல் திட்டவட்டமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
எகிப்து, கத்தார் ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்து முதல் முறையாக 2 அமெரிக்கர்களை ஹமாஸ் விடுவித்தது. இதற்குப் பதிலாக காஸாவுக்குள் நிவாரணப் பொருள்கள் செல்ல இஸ்ரேல் அனுமதித்தது. இஸ்ரேல் குண்டுவீச்சில் எகிப்து எல்லையோரம் அமைந்துள்ள காஸாவின் ராஃபா சர்வதேச எல்லைச் சாலைகள் கடுமையாகச் சேதமடைந்தன. இவை சீரமைக்கப்பட்டு ராஃபா எல்லை நேற்று காலை திறக்கப்பட்டது.
எகிப்து எல்லையில் 3,000 டன் நிவாரணப் பொருள்கள் கொண்ட 200-க்கும் மேற்பட்ட டிரக்குகள் காத்திருந்தபோதிலும், வெறும் 20 டிரக்குகள் மட்டும் காஸாவுக்குள் அனுமதிக்கப்பட்டன. இவை, வெளியேறிய வடக்கு காஸா மக்கள் தங்கியுள்ள தெயீர் அல்-பலா நிவாரண முகாம்களுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த டிரக்குகளில் உள்ள 44,000 குடிநீர் பாட்டில்கள் 22,000 மக்களுக்கு ஒருநாள் பயன்பாட்டுக்கு மட்டுமே வரும் என்பதால், பெருமளவில் நிவாரணப் பொருள்கள் காஸாவுக்குள் உடனடியாக அனுப்ப வேண்டியுள்ளது என்று யுனிசெஃப் செயல் இயக்குநர் கேத்தரீன் ருஸ்ஸல் தெரிவித்தார்.
காஸாவில் மனிதாபிமான நிலை பேரழிவு நிலையில் உள்ளதாகத் தெரிவித்த ஐ.நா. உலக உணவுத் திட்டத்தின் தலைவர் சின்டி மெக்கெயின், ‘போருக்கு முன்பு தினசரி 400 டிரக்குகள் காஸாவுக்குள் சென்றன. தற்போதைய நிலையில் அதற்கும் அதிகமான நிவாரணப் பொருள்கள் தேவை. எனினும், காஸாவில் மனிதாபிமான பிரச்னை கட்டுப்பாட்டில் உள்ளதாகத் தெரிவித்துள்ள இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடா்பாளா் டேனியல் ஹகாரி, ‘இந்த நிவாரணப் பொருள்கள் மக்கள் இடம்பெயா்ந்துள்ள தெற்கு காஸாவுக்கு மட்டும் செல்லும், எரிபொருள் அளிக்கப்பட மாட்டாது’ என தெரிவித்தார்.
20 டிரக்குகளில் உள்ள அத்தியாவசியப் பொருள்கள் 3 லட்சம் பேருக்கு பயன்படும் என்றும், அவசர மருந்துப் பொருள்கள் 1,200 பேருக்கு மட்டும் பயன்படும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது. மேலும் நிவாரணப் பொருள்கள் ஹமாஸ் படையினருக்கு சென்றுவிடக் கூடாது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் வலியுறுத்தியுள்ளார்.







