ஏர் இந்தியா நிறுவனம் இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போர் காரணமாக விமான சேவையை வரும் அக்.14 ஆம் தேதி வரை ரத்து செய்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது நேற்று காலை ராக்கெட்டுகளை வீசியும், எல்லை தாண்டியும் திடீா் தாக்குதல் நடத்தினா். இதில், 100-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியா்கள் உயிரிழந்தனா். 500-க்கும் மேற்பட்டோா் படுகாயம் அடைந்தனா். 2,500 ராக்கெட் குண்டுகள் மட்டுமே ஹமாஸ் வீசியதாகவும், பயங்கரவாதிகள் ஊடுருவிய 22 இடங்களில் சண்டை தொடா்வதாகவும் இஸ்ரேல் தெரிவித்தது.
இதனால் அதிா்ச்சி அடைந்த இஸ்ரேல், போா்ப் பிரகடனம் அறிவித்து நடத்திய பதிலடி தாக்குதலில் காஸா பகுதியில் 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். 1,600-க்கும் மேற்பட்டோா் பலத்த காயம் அடைந்ததாக பாலஸ்தீன சுகாதாரத் துறை அமைச்சா் தெரிவித்தாா். இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
காஸா எல்லைப் பகுதியில் துப்பாக்கிச் சண்டை 2ஆவது நாளாக தொடா்ந்து வருகிறது. இதனிடையே காஸாவில் வசித்து வரும் மக்கள் உடனடியாக வெளியேறும்படி இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் காஸாவுக்கு வழங்கப்படும் குடிநீர், எரிபொருள், உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தை நிறுத்தப்போவதாகவும் கூறியுள்ளார். இதனிடையே காஸாவில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அந்நகரம் இருளில் மூழ்கியது.
இந்நிலையில் இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போர் காரணமாக விமான சேவையை வரும் அக்.14-ம் தேதி வரை ஏர் இந்தியா நிறுவனம் ரத்து செய்துள்ளது. இது குறித்து ஏர் இந்தியா விமானச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாவது: “எங்கள் பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பிற்காக டெல் அவிவ் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் எங்கள் விமானங்கள் அக்டோபர் 14-ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படும். முன்பதிவுவை உறுதிசெய்த பயணிகளுக்கு விமான நிறுவனம் அனைத்து ஆதரவையும் வழங்கும்.” எனத் தெரிவித்தார்.
இஸ்ரேலில் போர் தீவிரமடைந்துள்ளதால் ஜெரூசலேம் புனித பயணத்தை தவிர்க்க தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.







