“தீபத்தூண் சர்வே கல்லா? சமணர்கள் வைத்ததா?” தமிழக அரசை விமர்சித்த அண்ணாமலை!

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தில் ஒரு கருத்தையும், உச்ச நீதிமன்றத்தில் மற்றொரு கருத்தையும் தமிழக அரசு தெரிவித்திருப்பது ஏன்? ஒரே கட்டமைப்பு தொடர்பாக திமுக மற்றும் தற்போதைய தவெக அரசு முரண்பட்ட நிலைப்பாடுகளை எடுத்திருப்பதாக ‘We The Leaders’ அமைப்பின் நிறுவனத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

‘We The Leaders’ அமைப்பின் நிறுவனத்தலைவர் அண்ணாமலை இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண் விவகாரத்தில் தமிழக அரசின் முரண்பட்ட நிலைப்பாடுகளைச் சுட்டிக்காட்டியுள்ளார். அந்தப் பதிவில், “கடந்த 2025 டிசம்பர் மாதம் அப்போதைய திமுக அரசின் கீழ் செயல்பட்ட இந்து சமய அறநிலையத்துறை (HR&CE), சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் ஒரு விளக்கத்தை அளித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண், சமணத் துறவிகளால் விளக்கேற்றுவதற்காக அமைக்கப்பட்டது என்று அறநிலையத்துறை தெரிவித்திருந்தது. ஆனால், இதற்கு முன்பு அந்தத் தீபத்தூண் ஒரு சர்வே கல் (Survey Stone) என்ற நிலைப்பாட்டைத் துறை எடுத்திருந்ததாகவும் அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் தவெக அரசு தெரிவித்த கருத்து!

இந்நிலையில், நேற்று தற்போதைய தவெக அரசு சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்த விளக்கத்தில், அதே தீபத்தூண் ஒரு சர்வே கல் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஒரே கட்டமைப்பு தொடர்பாக இரண்டு நீதிமன்றங்களில் தமிழக அரசு முற்றிலும் முரண்பட்ட நிலைப்பாடுகளை எடுப்பது எப்படி? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக அரசின் புரிதலில் குறைபாடா? திட்டமிட்ட தவறான புரிதலா?

மேலும், இந்த விவகாரம் தமிழக அரசின் புரிதலில் உள்ள மிகப்பெரிய குறைபாட்டையோ அல்லது ஒட்டுமொத்த விவகாரம் குறித்த திட்டமிட்ட தவறான புரிதலையோ வெளிப்படுத்துவதாக அவர் விமர்சித்துள்ளார். திமுக ஆட்சியில் இருந்தபோதும், தற்போது தவெக ஆட்சியில் இருக்கும்போதும் ஒரே தீபத்தூண் தொடர்பாக வெவ்வேறு நிலைப்பாடுகள் எடுக்கப்படுவது தமிழக அரசின் அணுகுமுறை குறித்த தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது” என அண்ணாமலை தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.