கிரிமியா பாலம் மீது உக்ரைன் தாக்குதல்.. ரஷ்யாவுக்கு நெருக்கடி!

ரஷ்யாவையும், ரஷ்யா ஆக்கிரமித்துள்ள கிரிமியா தீபகற்பத்தையும் இணைக்கும் முக்கிய போக்குவரத்துப் பாதையான கெர்ச் பாலம் மீது உக்ரைன் நடத்தியுள்ள தாக்குதல், ரஷ்யாவுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் தாக்கப்பட்ட கெர்ச் பாலம்!

ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கிரிமியா தீபகற்பத்தையும், ரஷ்யாவின் கிராஸ்னோடர் பிராந்தியத்தையும் இணைக்கும் 19 கி.மீ. நீளமுள்ள கெர்ச் பாலம் மீது, சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு உக்ரைன் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. நவம்பர் 17 இரவு நடைபெற்ற இந்தத் தாக்குதலில், பாலத்தின் நெடுஞ்சாலைப் பகுதி இடிந்து கடலில் விழுந்துள்ளது. இதனால், கருங்கடல் மற்றும் அசோவ் கடல் இடையிலான கப்பல் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பாலத்தில் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ரஷ்யப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்தது. பின்னர் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன. இந்தச் சம்பவத்தைப் பயங்கரவாதத் தாக்குதல் எனக் குறிப்பிட்ட ரஷ்ய அதிகாரிகள், குற்றவியல் விசாரணையையும் தொடங்கியுள்ளனர். இதற்குப் பிறகே தாக்குதலை நடத்தியதை உக்ரைனின் பாதுகாப்புப் பிரிவான SBU உறுதிப்படுத்தியது.

புதினின் கனவுத் திட்டமாகக் கருதப்படும் பாலம்!

கெர்ச் ஜலசந்தியின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள இந்தப் பாலம், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் முக்கியத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கடந்த 2014-ம் ஆண்டு உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா இணைத்துக்கொண்டதைத் தொடர்ந்து, இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கின. சர்வதேசச் சட்டத்தின்படி சட்டவிரோதமான நடவடிக்கையாகக் கருதப்படும் இந்த இணைப்புக்குப் பிறகு, நான்கு ஆண்டுகளில் பாலம் கட்டி முடிக்கப்பட்டது.

2022-ம் ஆண்டு உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான போர் தொடங்கியதிலிருந்து, இந்தப் பாலம் பலமுறை உக்ரைனின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. குறிப்பாக, 2022 அக்டோபரில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட லாரி மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் பாலம் பெரும் சேதமடைந்தது. இதனால் பல மாதங்கள் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதையடுத்து, 2025 ஜூன் மாதம் பாலத்தின் நீருக்கடியில் உள்ள தூண் கட்டமைப்பை வெடிபொருட்கள் மூலம் தகர்த்ததாக உக்ரைன் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்திருந்தது.

ஒரு மாதம் திட்டமிடப்பட்ட தாக்குதல்!

இந்த முறை உக்ரைன் நடத்திய தாக்குதல் சுமார் ஒரு மாத காலமாகத் திட்டமிடப்பட்டு, ஏழு வெவ்வேறு கட்டங்களாகச் செயல்படுத்தப்பட்டதாக உக்ரைன் பாதுகாப்புப் பிரிவான SBU தெரிவித்துள்ளது. முதலில் ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் முறையாகச் செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும், அதன் பிறகே பாலத்தின் மீதான நேரடித் தாக்குதல் தொடங்கியதாகவும் SBU தனது டெலிகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. உக்ரைனில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானங்கள் மற்றும் FP-5 Flamingo, R-360 Neptun ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல் போக்குவரத்துக்கும் பாதிப்பு!

கெர்ச் பாலத்தின் மீதான தாக்குதலால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து மட்டுமின்றி, கப்பல் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. பாலத்தின் சேதமடைந்த பகுதிகளிலிருந்து விழுந்த இடிபாடுகள் கெர்ச் ஜலசந்தியின் கப்பல் போக்குவரத்துப் பாதையை முழுமையாகத் தடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரைனின் ‘Strategy XXI’ உலகளாவிய ஆய்வு மையத்தைச் சேர்ந்த மைகைலோ ஹோன்சார் கூறுகையில், கெர்ச் ஜலசந்தியின் கப்பல் போக்குவரத்துப் பாதை வெறும் 120 மீட்டர் அகலம் கொண்டது என்றும், அதன் ஆழம் 3 முதல் 5 மீட்டர் வரை மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ராணுவத்தின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படுமா?

கெர்ச் பாலம் ரஷ்ய ராணுவத்தின் தளவாட விநியோகத்தில் பெரிய பங்கு வகிக்கவில்லை என்றும், அது பொதுமக்களுக்கான போக்குவரத்துக் கட்டமைப்பு மட்டுமே என்று கூறப்படுகின்றது. ஆனால், உக்ரைன் ராணுவ நிபுணர்கள் இதற்கு மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவின் ராணுவ விநியோகப் பாதைகளைத் தொடர்ந்து சீர்குலைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்தத் தாக்குதல் பார்க்கப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர். உக்ரைன் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள டொனெட்ஸ்க், சபோரிஷியா மற்றும் கெர்சன் பகுதிகள் வழியாகச் செல்லும் R-80 நெடுஞ்சாலை மீதும் உக்ரைன் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.

உக்ரைனின் ‘Information Resistance Group’ அமைப்பைச் சேர்ந்த ராணுவ நிபுணர் ஒலெக்சாண்டர் கோவலென்கோ கூறுகையில், கெர்ச் பாலத்துக்கு மாற்றாக ரஷ்யாவால் வேறு எந்த நிலப்பரப்பு வழிப் போக்குவரத்துப் பாதையையும் உருவாக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். பாலத்தின் சேதத்தால் ரஷ்ய ராணுவத்துக்கான பொருட்கள் மற்றும் ஆயுத விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படலாம் என்றும், தாக்குதல் அல்லது தற்காப்பு நடவடிக்கைகளுக்குத் தேவையான வளங்கள் கிடைக்காவிட்டால் அவை பாதிக்கப்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், கிரிமியாவில் இருந்து உக்ரைனின் ஒடெசா, மைகோலாயிவ் உள்ளிட்ட பகுதிகளை நோக்கி ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்படுவதாகவும், அவற்றுக்கான சில ஆயுதங்கள் கெர்ச் பாலம் வழியாகக் கொண்டு செல்லப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் பாலத்தின் சேதம் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனக் கூறப்படுகிறது.

புதினுக்கு அரசியல் ரீதியாகவும் பின்னடைவு?

கெர்ச் பாலத்தின் மீதான தாக்குதல், ரஷ்ய அதிபர் புதினின் அரசியல் செல்வாக்குக்கும் சவாலாக அமைந்துள்ளதாக உக்ரைன் ராணுவ நிபுணர் கோவலென்கோ தெரிவித்துள்ளார். குறிப்பாக, சீனாவின் ஷென்சென் நகரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரை புதின் சந்திக்க உள்ள முக்கியமான நேரத்தில் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது கவனம் பெற்றுள்ளது. இதற்கிடையே, பாலத்தின் சேதம் தொடர்பாக சமூக வலைதளமான X-ல் பல்வேறு மீம்ஸ்களும் கருத்துகளும் பகிரப்பட்டு வருகின்றன. மறுபுறம், பாலத்தை மீண்டும் கட்டியெழுப்புவோம் என்றும், முன்பைவிட சிறப்பாக அமைக்கப்படும் என்றும் புதினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்தப் பாலத்தை உடனடியாகச் சீரமைப்பது சாத்தியமில்லை என கீவ் போக்குவரத்துப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆண்ட்ரி கொரெட்ஸ்கி தெரிவித்துள்ளார். சேதமடைந்த பாலத்தை மீண்டும் கட்டுவதற்கு ஒன்றரை ஆண்டுகள் முதல் மூன்று ஆண்டுகள் வரை ஆகலாம் என அவர் மதிப்பிட்டுள்ளார். மேலும், உக்ரைன் தாக்குதல்களை நடத்தும் திறன் கொண்டிருக்கும் சூழலில், ரஷ்யா மீண்டும் இதேபோன்ற பாலத்தைக் கட்டுவது கடினமான பணியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால், கெர்ச் பாலத்தின் மீதான தாக்குதல் வெறும் போக்குவரத்துப் பாதிப்பு மட்டுமின்றி, ரஷ்யாவின் ராணுவ விநியோகம், கடல்சார் போக்குவரத்து மற்றும் உக்ரைன் போரின் அடுத்தகட்ட நகர்வுகள் ஆகியவற்றிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.