விசா இல்லா பயணத்திற்கு முடிவு.. இந்தியர்களுக்கு மலேசியா புதிய கட்டுப்பாடு!

மலேசியா செல்லும் இந்தியர்களுக்கு இனி விசா கட்டாயம்! இதுவரை வழங்கப்பட்டு வந்த விசா இல்லா நுழைவு அனுமதி 2027 ஜனவரி 1 முதல் ரத்து செய்யப்பட உள்ள நிலையில், டிசம்பர் 1 முதல் ஆன்லைன் மூலம் விசாவுக்கு விண்ணப்பிக்கலாம் என மலேசிய குடியேற்றத்துறை அறிவித்துள்ளது.

மலேசியாவுக்குச் செல்லும் இந்தியர்களுக்கான விசா விதிமுறைகளில் முக்கிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுவரை இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த விசா இல்லா நுழைவு அனுமதி, 2027 ஜனவரி 1 முதல் நிறுத்தப்பட உள்ளது. இதன்படி, ஜனவரி 1-ம் தேதி முதல் மலேசியாவுக்குச் செல்லும் அனைத்து இந்தியர்களும் அந்நாட்டிற்குப் புறப்படுவதற்கு முன்பாகவே செல்லுபடியாகும் விசா பெற வேண்டும்.

இதுகுறித்து மலேசிய குடியேற்றத்துறை (JIM) நவம்பர் 17-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கான விசா விலக்கு வசதி அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் நடைமுறையில் இருக்காது எனத் தெரிவித்துள்ளது. மேலும், இந்தியர்கள் மலேசிய விசாவுக்கு டிசம்பர் 1, 2026 முதல் MyVISA ஆன்லைன் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

7 வேலை நாட்களுக்கு மேல் நிலுவையில் இருந்தால் விசா விண்ணப்பம் காலாவதியாகும்!

மலேசிய விசா விண்ணப்ப நடைமுறையிலும் புதிய கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, ‘New Application’ அல்லது ‘Pending Payment’ என்ற நிலையில் 7 வேலை நாட்களுக்கு மேல் நிலுவையில் இருக்கும் விசா விண்ணப்பங்கள் தானாகவே காலாவதியாகிவிடும். இந்தப் புதிய விதிமுறை 2026 அக்டோபர் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. செப்டம்பர் 1, 2026-க்கு முன்பாக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தும் என மலேசிய குடியேற்றத்துறை செப்டம்பர் 28-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது. இவ்வாறு காலாவதியாகும் விண்ணப்பதாரர்கள், புதுப்பிக்கப்பட்ட விசா விண்ணப்பப் படிவத்தைப் பயன்படுத்தி மீண்டும் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விசா கட்டணம் திரும்ப வழங்கப்படாது!

விசா விண்ணப்பங்களுக்காகச் செலுத்தப்படும் கட்டணம், விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் அல்லது நிராகரிக்கப்பட்டாலும் திரும்ப வழங்கப்படாது என மலேசிய குடியேற்றத்துறை எச்சரித்துள்ளது. மேலும், விசா விதிமுறைகளில் மாற்றம் ஏற்படுவது அல்லது பயணத் திட்டங்கள் மாற்றப்படுவது போன்ற காரணங்களுக்காகவும் செலுத்திய கட்டணத்தைத் திரும்பப் பெற முடியாது. மலேசிய அரசின் உத்தரவுகளுக்கு ஏற்ப எந்த நேரத்திலும் நுழைவு விதிமுறைகளை மாற்றியமைக்கும் உரிமை தங்களுக்கு இருப்பதாகவும் அத்துறை தெரிவித்துள்ளது.

பலமுறை நுழையும் விசாவுக்கும் புதிய கட்டுப்பாடு!

இதற்கிடையே, கடந்த செப்டம்பர் 1, 2026 முதல் மலேசியா பலமுறை நுழையும் விசா (Multiple Entry Visa – MEV) வழங்குவதிலும் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, 31 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் பலமுறை நுழையும் விசா வழங்கப்படுகிறது. வணிகம், மருத்துவ சிகிச்சை, திருமண சுற்றுலா மற்றும் விமானம் – கப்பல் இணைந்த சுற்றுலா (Fly-and-Cruise) போன்ற குறிப்பிட்ட பயண நோக்கங்களுக்காக மட்டுமே இந்த விசாக்கள் வழங்கப்படுகின்றன.

வெளிநாட்டுப் பயணிகளுக்கு மருத்துவக் காப்பீடு பரிந்துரை!

மேலும், மலேசியாவுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள் தங்களது தங்கும் காலம் முழுவதற்கும் பொருந்தக்கூடிய பயண மருத்துவக் காப்பீடு பெற்றிருக்க வேண்டும் என மலேசிய குடியேற்றத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக நவம்பர் 16-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், மலேசியாவில் மருத்துவ சிகிச்சை மற்றும் பிற சுகாதார சேவைகளைப் பெறும் வெளிநாட்டினர் அதற்கான செலவுகளைத் தாங்களே ஏற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

மேலும், மருத்துவக் காப்பீடு மற்றும் அவசர உதவிகளை வழங்கும் ‘MyTripPass’ என்ற உள்வரும் பயணிகள் தளத்தையும் மலேசிய விசா விண்ணப்பங்களுக்குத் துணை ஆவணமாகப் பரிந்துரைத்துள்ளது. இந்தக் காப்பீட்டை வாங்கும் பயணிகளுக்கு உடனடியாக டிஜிட்டல் காப்பீட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.