GTA 6 வெளியீடு.. விடுமுறை எடுக்கத் தயாராகும் ஊழியர்கள்!

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘GTA 6’ வீடியோ கேம் வெளியீட்டை முன்னிட்டு, அமெரிக்காவில் ஐந்தில் ஒருவர் வேலைக்கு விடுமுறை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

13 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் GTA 6!

பிரபலமான ‘Grand Theft Auto’ (GTA) வீடியோ கேம் தொடரின் அடுத்த பாகமான GTA 6-க்காக விளையாட்டு ரசிகர்கள் சுமார் 13 ஆண்டுகளாகக் காத்திருக்கின்றனர். இந்த நீண்டகால எதிர்பார்ப்புக்கு மத்தியில், நவம்பர் 19, வியாழக்கிழமை GTA 6 வெளியீட்டை முன்னிட்டு அமெரிக்க ஊழியர்கள் பலரும் தங்களது விடுமுறை நாட்களைத் திட்டமிட்டு வருகின்றனர். அமெரிக்காவின் டல்லாஸ் – ஃபோர்ட் வொர்த் பகுதியைச் சேர்ந்த 26 வயதான லேண்டர் ஆல்குட் என்ற சுற்றுச்சூழல் நிபுணர், இந்த கேம் வெளியீட்டிற்காக ஜூலை மாதத்திலேயே இரண்டு வார ஊதியத்துடன் கூடிய விடுமுறைக்கு விண்ணப்பித்துள்ளார்.

சுமார் 13 வயது முதல் GTA 5 விளையாடி வரும் அவர், GTA 6 வெளியீட்டை வீடியோ கேம் உலகின் மிகப்பெரிய அறிவியல் சாதனையான அப்பல்லோ விண்வெளித் திட்டத்துடன் ஒப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “வீடியோ கேம்களின் அப்பல்லோ விண்வெளித் திட்டத்தை நாம் பார்க்கப் போகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். இருப்பினும், கேம் விளையாடுவது மட்டுமே அவரது திட்டமல்ல. தனது இரண்டு வயது மகனுடனும் நேரத்தைச் செலவிட அவர் திட்டமிட்டுள்ளார். வியாழன் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை குழந்தையைப் பார்த்துக்கொள்ள தனது பெற்றோரிடமும் ஏற்பாடு செய்துள்ளார். குழந்தை தூங்கிய பிறகு பல மணி நேரம் கேம் விளையாடத் திட்டமிட்டுள்ள அவர், வார இறுதியில் குறைந்தது 20 மணி நேரமாவது விளையாட வேண்டும் என இலக்கு வைத்துள்ளார்.

கேமுக்காக விடுமுறை எடுத்த இளைஞர்கள்!

அயோவா மாகாணத்தைச் சேர்ந்த 22 வயதான ஐடி நிர்வாகி கானர் ஃபோல்கர்ஸும் GTA 6 வெளியீட்டிற்காகத் தனது வேலை அட்டவணையை மாற்றியுள்ளார். நவம்பர் 19 முதல் நன்றி தெரிவிக்கும் தினம் (Thanksgiving) வரை விடுமுறை கேட்டுள்ள அவர், 24 மணி நேரத்திற்கும் மேலாக கேம் விளையாடத் திட்டமிட்டுள்ளார். கேமின் கதையையும் விளையாட்டு அனுபவத்தையும் மற்றவர்களின் கருத்துகளால் பாதிக்கப்படாமல் முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்பதே அவரது நோக்கமாக உள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த கேம் வெளியீட்டை ஒரு கலாச்சார நிகழ்வாகப் பார்ப்பதாகவும், இணையத்தில் வெளியாகும் கதையின் அம்சங்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான தகவல்கள் தனது சொந்த அனுபவத்தைப் பாதிக்கக் கூடாது என்பதால், போதிய நேரத்தை ஒதுக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த வெளியீட்டை அமெரிக்காவின் புகழ்பெற்ற சூப்பர் பவுல் விளையாட்டு நிகழ்வுடன் ஒப்பிட்டுள்ளார்.

‘GTA Flu’.. உடல்நலக்குறைவு எனக் கூறி விடுமுறை!

GTA 6 வெளியீட்டிற்காக அனைவரும் முறையாக விடுமுறை கேட்பதில்லை. சிலர் நவம்பர் 19 அன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறி வேலைக்குச் செல்லாமல் இருக்கத் திட்டமிட்டுள்ளனர். கேம்களை விளையாடும் அமெரிக்காவின் 1,000 முழுநேர ஊழியர்களிடம் GameSquare நிறுவனம் நடத்திய ஆய்வில், 10 சதவீதம் பேர் கேம் வெளியீட்டு நாளில் வேலைக்குச் செல்லப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளனர். மேலும், 30 சதவீதம் பேர் விடுமுறை எடுப்பது குறித்து பரிசீலித்து வருகின்றனர்.

இவ்வாறு விடுமுறை எடுக்கத் திட்டமிட்டவர்களில் 36 சதவீதம் பேர், முறையாக விடுமுறை கேட்பதற்குப் பதிலாக உடல்நலக்குறைவு எனக் கூறி விடுப்பு எடுக்க விரும்புவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்கிடையே, BambooHR நிறுவனம் நடத்திய ஆய்விலும் அமெரிக்காவில் ஊதியம் பெறும் ஊழியர்களில் ஐந்தில் ஒருவர் GTA 6 வெளியீட்டிற்காக விடுமுறை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, Gen Z தலைமுறையினரில் 32 சதவீதம் பேரும், மில்லினியல்களில் 27 சதவீதம் பேரும் கேம் விளையாடுவதற்காக ஊதியத்துடன் கூடிய விடுமுறையைப் பயன்படுத்த உள்ளனர்.

இதுகுறித்து BambooHR நிறுவனத்தின் மனிதவளப் பிரிவு இயக்குநர் நிக்கோல் சிசார் கூறுகையில், ஊழியர்கள் தங்களுக்குப் பிடித்தமான விஷயங்களுக்காக விடுமுறையைப் பயன்படுத்துவது ஆரோக்கியமான அணுகுமுறை எனத் தெரிவித்துள்ளார். மேலும், முன்கூட்டியே விடுமுறை கேட்டால் விண்ணப்பித்து, அனுமதிக்காகக் காத்திருக்க வேண்டியிருக்கும். ஆனால், உடல்நலக்குறைவு எனக் கூறி விடுப்பு எடுத்தால், அன்றைய தினம் ஒரு தகவல் தெரிவித்தால் போதும் என்பதால் சிலர் அந்த வழியைத் தேர்வு செய்வதாகவும் அவர் விளக்கியுள்ளார்.

கேமுக்காக வேலைக்கு விடுமுறை இல்லை!

இவ்வளவு ஆர்வம் இருந்தாலும், அனைவரும் GTA 6-க்காக வேலையை ஒதுக்கத் தயாராக இல்லை. அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தைச் சேர்ந்த 42 வயதான ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் ரியான் வான் டியூசன், கேம் வெளியீட்டிற்காக மாணவர்களுக்குப் பாடம் நடத்துவதைத் தவிர்க்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். தனது மாணவர்கள் வகுப்பறைக்கு வர வேண்டும் என எதிர்பார்க்கும் நிலையில், ஒரு வீடியோ கேமுக்காக அவர்களுக்குப் பாடம் நடத்தாமல் விடுமுறை எடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரத்தில், வேலை மற்றும் குடும்பத்தைவிட வீடியோ கேம் முக்கியமானது அல்ல என்றாலும், இதுபோன்ற சிறிய விஷயங்களுக்காக உற்சாகமாகக் காத்திருப்பதும் வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தரும் என அவர் தெரிவித்துள்ளார். எனவே, நன்றி தெரிவிக்கும் விடுமுறை நாட்களில் GTA 6 விளையாடத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். 13 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் புதிய GTA கேமுக்காக அமெரிக்க ஊழியர்கள் பலரும் தங்களது வேலை நேரத்தையே மாற்றியமைக்கத் தயாராகியிருப்பது, இந்த வீடியோ கேம் மீதான எதிர்பார்ப்பையும் ரசிகர்களின் ஆர்வத்தையும் வெளிப்படுத்துகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.