இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் தூதரகத்தை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம்: மத்திய இணையமைச்சர் முரளீதரன்!

இஸ்ரேலில் உள்ள தூதரகத்தை இந்தியர்கள் எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம் என்று வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளீதரன் தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ம் தேதி காலை…

இஸ்ரேலில் உள்ள தூதரகத்தை இந்தியர்கள் எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம் என்று வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளீதரன் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ம் தேதி காலை ராக்கெட்டுகளை வீசியும், எல்லை தாண்டியும் திடீா் தாக்குதல் நடத்தினர். இதில், 100-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 2,500 ராக்கெட் குண்டுகள் மட்டுமே ஹமாஸ் வீசியதாகவும், ஊடுருவிய 22 இடங்களில் சண்டை தொடர்வதாகவும் இஸ்ரேல் தெரிவித்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த இஸ்ரேல், போர்ப் பிரகடனம் அறிவித்து நடத்திய பதிலடி தாக்குதலில் காஸா பகுதியில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 1,600-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்ததாக பாலஸ்தீன சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்தார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

காஸா எல்லைப் பகுதியில் துப்பாக்கிச் சண்டை 3வது நாளாக தொடர்ந்து வருகிறது. இதனிடையே காஸாவில் வசித்து வரும் மக்கள் உடனடியாக வெளியேறும்படி இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் காஸாவுக்கு வழங்கப்படும் குடிநீர், எரிபொருள், உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தை நிறுத்தப்போவதாகவும் கூறியுள்ளார்.

காஸாவில் 400 ஹமாஸ் அமைப்பினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 30-க்கும் மேற்பட்டோர் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர். இருதரப்புக்கு இடையிலான போரில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்நிலையில், இஸ்ரேலில் உள்ள வைர வியாபாரிகள், தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள், மாணவர்கள் என சுமாா் 18,000 இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து கேரள மாநிலம் கொச்சியில் மத்திய இணையமைச்சர் வி.முரளீதரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஏதேனும் உதவி தேவைப்பட்டால், அந்நாட்டில் உள்ள தூதரகத்தை இந்தியர்கள் தொடர்புகொள்ள வேண்டும். எந்த நேரத்திலும் அவர்கள் தூதரகத்தை தொடர்புகொள்ளலாம். அனைத்து உதவிகளையும் இந்திய தூதரகம் வழங்கும்” என்று தெரிவித்தார்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்கள் விழிப்புடன் இருக்க அந்நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் அறிவுறுத்தியுள்ளன. இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிவுறுத்தலில், ”தேவையற்ற பயணங்களை இந்தியா்கள் தவிர்த்து, உள்ளூர் அதிகாரிகளின் அறிவுரைப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டது.

இந்த அறிவுறுத்தல் ஆங்கிலம், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் மராத்தி மொழிகளில் வெளியிடப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.