இந்தியா பாகிஸ்தான் போட்டி – ஆதிக்கம் செலுத்துமா இந்திய அணி?

இந்திய பாகிஸ்தான் இடையே நடைபெறும்  ஆசிய கோப்பை போட்டியில் வழக்கமாக சாதிக்கும் இந்திய அணி,  இந்த ஆண்டும் வெற்றி பெற்று சரித்திரம் படைக்குமா என கிரிக்கெட் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 15வது ஆசிய கோப்பை…

இந்திய பாகிஸ்தான் இடையே நடைபெறும்  ஆசிய கோப்பை போட்டியில் வழக்கமாக சாதிக்கும் இந்திய அணி,  இந்த ஆண்டும் வெற்றி பெற்று சரித்திரம் படைக்குமா என கிரிக்கெட் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

15வது ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 27ம் தேதி தொடங்க உள்ளது. இலங்கையில் நடைபெற இருந்த இந்த தொடரானது அங்கு நடந்து வரும் பொருளாதார அரசியல் சிக்கல்களால் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
6 அணிகள் பங்குபெறும் ஆசிய கோப்பை தொடர் 27ம் தேதி தொடங்கி செப்டம்பர் 11 வரை நடைபெறுகிறது. 1984 முதல் நடைபெற்று வரும் இந்த ஆசிய கோப்பை தொடர் ஒரு நாள் போட்டிகளாக நடத்தப்பட்டு வந்தது. 2016 முதல் ஒரு நாள் மற்றும் இருபது ஓவர் என சுழற்சி முறையில் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

2020-ம் ஆண்டு நடைபெற இருந்த ஆசிய கோப்பை கொரோனா அச்சுறுத்தலால் தள்ளி வைக்கப்பட்டு தற்போது தொடங்கியுள்ளது. தொடரின் இரண்டாவது நாளான ஆகஸ்ட் 28ம் தேதி மிக முக்கிய அணிகளான இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடைபெற உள்ளது.காலங்காலமாக மிகப்பெரிய எதிர்பார்ப்போடு நடக்கும் இந்தியா- பாகிஸ்தான் போட்டி, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற இருபது ஓவர் உலகப்கோப்பை போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவிய இந்திய அணி, உலக கோப்பை வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தானிடம் வீழ்ந்த வரலாற்றை பதிவு செய்தது. அதற்கு பதிலளிக்கும் வகையில் செயல்பட்டு வெற்றியை பதிவு செய்யுமா என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

2 ஆண்டுகளுக்கு மேலாக சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தும் விராட் கோலி, இந்த தொடரில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்த போகிறார் என்ற விவாதம் எழுந்துள்ளது. மேலும் ரோஹித் சர்மா முழு நேர கேப்டனான பின்பு நகரும் பெரிய தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து இருபது ஓவர் உலக கோப்பை தொடர் நடக்க உள்ளதால், ஆசிய கோப்பை தொடரின் செயல்பாடு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
ஆசிய கோப்பையில் வழக்கமாக சாதிக்கும் இந்திய அணி, இந்த ஆண்டும் வெற்றி பெற்று சரித்திரம் படைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்..

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.