டிஎன்பிஎஸ்சி செயலாளர் மீது அவமதிப்பு நடவடிக்கை-வழக்கை ஒத்திவைத்தது நீதிமன்றம்

1 முதல் 12ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி வரை தமிழ் வழியில் நேரடியாக படித்தவர்களுக்கு மட்டும் அரசு பணியில் தமிழ் வழியில் படித்தோருக்கான இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற உத்தரவை பின்பற்றாத TNPSC…

1 முதல் 12ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி வரை தமிழ் வழியில் நேரடியாக
படித்தவர்களுக்கு மட்டும் அரசு பணியில் தமிழ் வழியில் படித்தோருக்கான இட
ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற உத்தரவை பின்பற்றாத TNPSC செயலாளர் மீது
நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கை ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கில் நீதிமன்றம் தாமாக முன்வந்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக
பதிவாளரை எதிர் மனுதாரராக சேர்த்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 29
தேதிக்கு ஒத்திவைத்தது.

மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சக்திராவ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்
மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2019-ல் குரூப்-1 தேர்விற்காக
விண்ணப்பிக்க அழைப்பு விடுத்தது. தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான
ஒதுக்கீட்டிலும் நான் தேர்வு செய்யப்படவில்லை. விதிப்படி தமிழ் வழியில் கல்வி பயின்றவருக்கு 20% இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டுள்ளது.

அந்த இட ஒதுக்கீட்டை பெறுவதற்கு நான் தகுதியானவர் இருப்பினும் எனக்கு அந்த
சலுகை வழங்கப்படவில்லை. இதுகுறித்து விசாரித்தபோது தமிழ்வழியில் கல்வி
பயின்றதற்கான இட ஒதுக்கீட்டு சலுகை, தொலை நிலை கல்வியில் பயின்றவருக்கும்
வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

தொலைநிலைக் கல்வி பயின்றவர்களுக்கு தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீடு
வழங்குவது பொருத்தமாக இருக்காது.

ஆகவே, தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீடு அடிப்படையில் குரூப் 1 தேர்வு
நடைமுறைக்குத் தடை விதிக்க வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை கடந்த 2021ஆம் ஆண்டு விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி
அமர்வு பல்வேறு உத்தரவு பிறப்பித்தது.

1ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரையும், கல்லூரியும் தமிழ் வழியில் நேரடியாக படித்தவர்களுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தனர்.


இந்த நிலையில், இந்த உயர்நீதிமன்ற உத்தரவை TNPSC பின்பற்றவில்லை எனவே,
டிஎன்பிஎஸ்சி செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி மனு
தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில், பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது.

இதை தொடர்ந்து இந்த வழக்கில், நீதிமன்றம் தாமாக முன்வந்து, மதுரை காமராஜர்
பல்கலைக்கழக பதிவாளரை, இந்த வழக்கில் எதிர் மனுதாரராக சேர்த்து வழக்கு
விசாரணையை செப்டம்பர் 29 தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.