கன மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் உபரி நீரின் அளவு அதிகரித்துள்ளது.
வங்கக்கடலில் கடந்த 13- ஆம் தேதியன்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது, மேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு மற்றும் தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடற்கரை பகுதியை இன்று நெருங்கு வதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புதிதாக நிலவியதால் தமிழ்நாட்டில் சில இடங்களில் கன மழை பெய்து வந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழ்நாட்டில் மேலும் 4 நாட்களுக்குப் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தொடர்மழை காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு அணைகள், ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரண மாக, செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக, இன்று காலை 2000 கன அடியாக திறந்து விடப்பட்ட உபரி நீர், தற்போது 3 ஆயிரத்து 151 கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
ஏரியின் நீர்மட்டம் தற்போது 20.70 அடியாகவும், மொத்த கொள்ளளவு 2,779 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. நீர்வரத்து 2000 கன அடியாக உள்ள நிலையில், தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கக் கூடும் என்பதால் தற்போது 3 ஆயிரத்து 151 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.








