மணிப்பூர் வீடியோ விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்களின் ஒன்றான மணிப்பூரில் நாகா, குக்கி மற்றும் மைதேயி இனங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் நாகா மற்றும் குக்கி இன மக்கள் பழங்குடி பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் மணிப்பூர் உயர்நீதிமன்றம் மேதேயி மக்களுக்கு பழங்குடி பட்டியலில் சேர்ப்பதற்கான பரிந்துரைகள் குறித்து விரிவான அறிக்கையை மத்திய அரசுக்கு நான்கு வாரங்களுக்குள் அனுப்புமாறு கேட்டுக் கொண்டது.
மைதேயி மக்களை பழங்குடியின பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. மணிப்பூர் மாநில அனைத்து பழங்குடி மாணவர் சங்கம் சார்பில் கடந்த மே 3ம் தேதி பேரணிக்கு ஏற்பாடு செய்தனர். இந்த பேரணியில் நாகா இன மக்களும், குக்கி இன மக்களும் திரளாக பங்கெடுத்துக் கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மைதேயி இன மக்களும் பேரணி நடத்தினர். இந்த பேரணிக்கு பின்பு மணிப்பூர் முழுவதும் படிப்படியாக வன்முறையாக மாறியது.
கடந்த மே 4-ம்தேதி மணிப்பூரில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் கொடுமை செய்த காணொலி இணையத்தில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து பல்வேறு கருத்துகளை தெரிவித்ததோடு மணிப்பூர் அரசு மற்றும் மத்திய அரசு இந்த விவகாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து இருந்தது
இவ்விவகாரம் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுவதாகவும் வழக்கின் விசாரணையை மணிப்பூர் மாநிலத்திலிருந்து வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரி மத்திய அரசு கோரியிருந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வர இருந்தது. ஆனால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உடல் நலம் சரியில்லாத காரணமாக அன்றைய தினம் விசாரணை நடைபெறவில்லை.
இதற்கிடையே கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட இரு பெண்கள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து வெளிப்படையான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. அதேபோல தங்களது அடையாளங்களை வெளியிடாமல் பாதுகாக்க உத்தரவிட கோரியும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை அமர்வு, மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு பெண்கள் ஆடைகள் இன்றி ஊர்வலமாக இழுத்து வரப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை தனி ஒரு சம்பவமாக பார்க்கவில்லை. இது போன்ற பல சம்பவங்கள் ஏற்கனவே அரங்கேறி உள்ளது. இந்த இரண்டு பெண்களுக்கான நீதியை நாங்கள் வழங்குவோம்.
ஆனால் மணிப்பூரில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த பிரச்னையும் பரந்த கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். இத்தகைய கொடுமைகளுக்குள்ளான பல பெண்கள் இன்னும் புகார் அளிக்காமல் இருக்கின்றனர். புகார் அளிக்கப்படவில்லை என்றாலும் இவை எல்லாவற்றையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என கூறிய நீதிபதிகள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து எத்தனை முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறீர்கள் ? என்று கேள்வி எழுப்பினர்.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி, சிபிஐ இந்த வழக்கில் விசாரிப்பது மற்றும் வழக்கு அசாமுக்கு மாற்றப்படுவதற்கும் உடன்பாடு இல்லை என வாதங்களை முன்வைத்தார். இதற்கு அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வழக்கு மணிப்பூருக்கு வெளியே கொண்டு செல்ல வேண்டும் என்று தான் கூறினோமே தவிர, அசாம் என குறிப்பிடவில்லை என வாதிட்டார்.
பாதிக்கப்பட்ட பெண் தரப்பு வாதம்:
பாதிக்கப்பட்ட பெண்ணின் ஒருவரது தந்தை சகோதரர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் இதுவரை அவரது உடல் கூட எங்களுக்கு கொடுக்கப்படவில்லை. நீதிமன்றம் தலையிட்டதற்கு பிறகு தான் இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை கூட தாக்கல் செய்யப்பட்டது. பிறகு எப்படி எங்களுக்கு நம்பிக்கை வரும்?. இங்கு எல்லாமே ஒரு தலைபட்சமாக இருக்கிறது. இது போன்ற ஏராளமான சம்பவங்கள் மாநிலம் முழுவதும் அரங்கேறியுள்ளது என்று மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் வாதிட்டார்.
பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பில் ஆஜரான மற்றொரு வழக்கறிஞரான இந்திரா ஜெய்சிங், மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, கொலை மற்றும் அங்கு நிலவும் சட்ட ஒழுங்கு தொடர்பாக 500க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றாலும் அதில் பெரும்பாலானவற்றில் முழுமையான தெளிவான விளக்கங்கள் எதுவும் இல்லை. மேலும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களை மீண்டும் மீண்டும் ஒரே விஷயம் குறித்து பேச வைப்பது என்பது அவர்களுக்கு மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தும்.
முதலில் அவர்களுக்கு நம்பிக்கையை கொடுக்க வேண்டும். அதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் நிபுணர்களை கொண்ட உயர் மட்ட குழு அமைக்கப்பட வேண்டும். அந்தக் குழுவில் இடம் பெறக்கூடியவர்கள் பெண்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் பாதிக்கப்பட்ட பெண்களிடம் பேசி அறிக்கையை தயார் செய்வார்கள். அதற்குப் பிறகு இந்த விவகாரத்தில் ஒரு முடிவிற்கு வரலாம் என வாதிட்டார்.
இதனை தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி, பாதிக்கப்பட்ட பெண்கள் இந்த குழுவிடம் மட்டும் தான் பேசுவார்கள் என்றால், அது காவல்துறையினர் நடத்தும் விசாரணையை பாதிக்கும் வகையில் அமையாதா? பிறகு எப்படி குற்றவாளிகளை கண்டறிந்து விரைவான விசாரணையை மேற்கொள்ள முடியும் ? என்று கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து ஆஜரான வழக்கறிஞர், குக்கி இனத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் தங்களது பணியிடத்திலிருந்த போது வன்முறை கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். அவர்களுடைய உடல்கள் கூட இன்னமும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. ஒட்டுமொத்த குடும்பமும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து இன்னும் முதல் தகவல் அறிக்கை கூட தாக்கல் செய்யப்படவில்லை என்று வாதிட்டார்.
இதனை தொடர்ந்து வாதிட்ட மத்திய சொலிசிட்டர் ஜெனரல், எந்த ஒரு இனத்தின் பெயரையும் குறிப்பிட்டு வாதங்களை முன்வைக்க வேண்டாம் என்றும், அது ஏற்கனவே இருக்கும் வன்முறையை தூண்டுவதாக அகிவிடும் எனவும் கூறினார்
பின்னர் பேசிய தலைமை நீதிபதி, இந்த விவகாரத்தில், மணிப்பூர் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய அதிக காலம் எடுத்துக் கொண்டது ஏன்? இரண்டு பெண்கள் ஆடைகள் இன்றி இழுத்துச் செல்லப்பட்டு கொடூரமான முறையில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உள்ளனர். ஆனால் இது குறித்து அருகில் இருக்கக்கூடிய காவல் துறையினருக்கு எந்த தகவலும் தெரியவில்லையா எதற்காக இந்த விவகாரத்தில் மிக தாமதமாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது என கேள்வி எழுப்பினர்.
இதனையடுத்து மத்திய அரசு சொலிசிட்டர் ஜெனரல். மணிப்பூர் விவகாரத்தில் விசாரணைக்காக மூன்று மாதம் அவகாசம் வேண்டும். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கண்காணிப்பு இருந்தாலும் மத்திய அரசுக்கு ஆட்சேபனை இல்லை என தெரிவித்தார். இதனையடுத்து உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் விசாரித்துவிட்டு சரியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தது.
- பி.ஜேம்ஸ் லிசா











