எஸ்.ஐ.ஆர் தொடர்பான வழக்கில் வாதாடிய மம்தா பானர்ஜி – தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்.!

உச்ச நீதிமன்றத்தில் எஸ்.ஐ. ஆர் பணிகளுக்கு எதிரான வழக்கில் அம்மாநில முதலைமச்சர் மம்தா பானர்ஜி வழக்கறிஞராக ஆஜராகி வாதாடினார்.

பீகாரை தொடர்ந்து தமிழ் நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணி (SIR) மேற்கொள்ளபட்டு வருகிறது. மேற்கு வங்கத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் எஸ்.ஐ.ஆர் பணிகளால் சிலர் உயிரிழந்துள்ளதாகவும் குற்றம் சாட்டி அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் நேற்று அவர் எஸ்.ஐ.ஆர் பணிகளால் பாதிக்கப்பட்டவர்கள் குழு ஒன்றையும் டெல்லிக்கு அழைத்து சென்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை சந்தித்தார்.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையில் இன்று நடைபெற்ற எஸ்.ஐ.ஆர் வழக்கில் வழக்கறிஞராக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி ஆஜனார். கொல்கத்தாவின் ஜோகேஷ் சந்திர சவுத்ரி சட்டக் கல்லூரியில் சட்டம் முடித்துள்ள மம்தா பானர்ஜி கடைசியாக 2003 இல் வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றுள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை கடுமையான விமர்சித்து வதாடிய மம்தா பானர்ஜி வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்கியதற்கு எதிரான மாநில அரசின் ஆதாரங்களை நிராகரிப்பதாகவும், பெயர்களை நீக்கும் நடவடிக்கையில் மட்டுமே தேர்தல் ஆணையம் செயல்படுவதாக குற்றம் சாட்டினார். தேர்தல் ஆணையம் தரப்பில் மேற்கு வங்க எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளில் உள்ள சிக்கல்கள் குறித்து ஆராய்வதற்காக இந்த வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் மம்தா பானர்ஜியின் மனு தொடர்பாக இரண்டு நாட்களுக்குள் பதிலளிக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்தி வைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.