பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் எவராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் உறுதியளித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கடலூர் விருத்தாச்சலம் நகரத்தில் உள்ள நர்சரி பிரைமரி பள்ளியில், ஒன்றாம் வகுப்பு படிக்கும் பெண்குழந்தை வயிற்று வலியால் துடித்த நிலையில், அக்குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருப்பதாக பேசினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து விருத்தாச்சலம் நகராட்சி நகர்மன்ற உறுப்பினர் தான் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டார் என்பதை அந்த பெண் குழந்தை உறுதிப்படுத்தியதாகவும் எடப்பாடி பழனிசாமி பேசினார். குற்றவாளியாக அடையாளம் காட்டப்பட்டவர் அரசியல் இயக்கத்தை சேர்ந்தவர் என்பதால், இதுவரை அவர் கைது செய்யப்படாதது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், இது போன்ற கொடுங்குற்றம் புரிந்தவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.
இதையும் படியுங்கள் : பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கோரி இபிஎஸ் மனு – 10 நாட்களில் முடிவு எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு!
அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறுமியின் தாயார் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகார் அடிப்படையில் காவல்துறையினர் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டதன் அடிப்படையில், அப்பள்ளியின் தாளாளரும், ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியருமான பக்ரிசாமி மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் கைதும் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
குற்றம் சாட்டப்பட்டுள்ள பக்கிரிசாமி விருத்தாசலம் நகர் மன்றத்தின் 30-வது வார்டு உறுப்பினராக உள்ளார் என்பதை அறிந்த உடனே, அவர் திமுகவின் அடிப்படை உறுப்பினரிலிருந்து ரத்து செய்யப்பட்டு கட்சியில் இருந்தும் நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பேரவையில் விளக்கமளித்தார்.
குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மனித குலத்திற்கு அவமான சின்னம் என கருதுவதாகவும், இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் எவராக இருந்தாலும் அவர்கள் மீது எந்த விதமான பாரபட்சமும் இன்றி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.