ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கேர், நடிகை ஷில்பா ஷெட்டிக்கு முத்தம் கொடுத்த வழக்கை விசாரித்த மும்பை நீதிமன்றம், இவ்வழக்கில் இருந்து ஷில்பா ஷெட்டியை விடுவித்துள்ளது.
கடந்த 2007ம் ஆண்டு ராஜஸ்தானில் நடந்த ஒரு எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கேர், நடிகை ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது விழா மேடையில் நின்று கொண்டிருந்த நடிகர் ரிச்சர்ட் கேர் யாருமே எதிர்பார்க்காத சூழலில் திடீரெனெ நடிகை ஷில்பா ஷெட்டியை இருக்கி அணைத்து கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தார். ஒரு எளிய முத்தம் எச்ஐவி தொற்று பரவுவதற்கு வழிவகுக்காது என்பதைக் காட்டவே தான் இப்படி செய்ததாக ரிச்சர்ட் விளக்கம் கொடுத்த போதிலும், இந்த செயல் அந்த சமயம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. குறிப்பாக, இந்த சம்பவத்திற்கு பல்வேறு சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்ததோடு,
ரிச்சர்ட் கேர் கொடுத்த முத்தத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சிரித்தபடி வாங்கிக் கொண்ட நடிகை ஷில்பாவுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து அப்போது போஸ்டர்களும் ஒட்டப்பட்டன.
இதனை தொடர்ந்து, மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட சில மாநிலங்களில் ரிச்சர்ட் கேர், ஷில்பா ஷெட்டிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. அதில் புகார்தாரரின் கூற்றுப்படி, இது ஒரு பொது நிகழ்வு என்பதை ஷில்பா அறிந்திருந்தாலும், ரிச்சர்ட் அவள் கன்னத்தில் ஒரு முத்தம் வைக்க முடிவு செய்தபோது அவள் எதிர்க்கவில்லை. அதன் மூலம் ஒரு ஆபாசமான செயலுக்கு உடந்தையாக
ஷில்பா ஷெட்டி இருந்துள்ளார் என குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. நீண்டகாலமாக இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஷில்பா ஷெட்டி கடந்த 2017ம் ஆண்டு இந்த வழக்கை மும்பைக்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.
அதன்படி இவ்வழக்கு மும்பை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. பின்னர் கடந்த 2021ல் மெட்ரோபாலிட்டன் கோர்ட், நடிகை ஷில்பா ஷெட்டியை இவ்வழக்கில் இருந்து விடுவித்த போதும், ஷில்பா மீதான டிஸ்சார்ஜ் உத்தரவை எதிர்த்து மகாராஷ்டிர அரசு மேல்முறையீடு செய்ததை தொடர்ந்து, வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் தற்போது, ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கேர் ஷில்பா ஷெட்டிக்கு முத்தம் கொடுத்த வழக்கில் இருந்து, நடிகை ஷில்பா ஷெட்டி விடுவிக்கப்படுவதாக மும்பை மெட்ரோபாலிட்டன் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் “தெருவில் நடக்கும் போதோ அல்லது பொது வழியில் அல்லது பொதுப் போக்குவரத்தில் ஒரு பெண்ணைத் தொட்டால், குற்றம் சாட்டப்பட்டவராகவோ அல்லது பங்கேற்பாளராகவோ கருதப்பட முடியாது. மேலும் அவளை சட்டத்திற்குப் புறம்பாகத் தவறவிட்டு வழக்குத் தொடரவும் முடியாது. குறிப்பாக இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ரிச்சர்ட் கேரின் செயலால் ஷில்பா ஷெட்டி பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இருந்தும் போலீஸார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் பார்த்தால் ஷில்பா ஷெட்டிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றே தெளிவாக தெரிகிறது. எனவே, அவர் மீதான குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்படுகிறார்” என்று நீதிபதி கூறியுள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா










