வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 190 நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் மழை கால சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
மழைநீர் தேக்கம் மற்றும் அதி கனமழை காரணமாக நெல்லையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து செல்லும் பகல் நேர ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதையும் படியுங்கள்: நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
திருநெல்வேலியில் பேருந்து நிலையத்தில் இருந்து சிந்துபூந்துறை செல்லும் சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதிகள், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடி வருவதால் மாவட்டம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் 190 நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் மழை கால சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.







