கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கொரோனா நோய்த் தொற்று தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, திருப்பூர், சேலம் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக, ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் எடுக்கப்பட்ட முடிவிற்கிணங்க, கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் சிறப்புக் கவனம் செலுத்திடவும், கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைகள் தொடர்பான ஒருங்கிணைப்புப் பணிகளை கண்காணிக்கவும், இம்மூன்று மாவட்டங்களுக்கும் இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களை நியமித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு மு.அ.சித்திக், முதன்மைச் செயலாளர் /ஆணையர், வணிகவரித் துறை, திருப்பூர் மாவட்டத்திற்கு சி.சமயமூர்த்தி, வேளாண்மைத் துறை செயலாளர், ஈரோடு மாவட்டத்திற்கு டாக்டர் இரா.செல்வராஜ், நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.







