கடந்த 9 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்காக மத்திய பாஜக அரசு கொண்டு வந்த திட்டங்களை பட்டியலிட உள்துறை அமைச்சர் அமித்ஷா தயாரா என முதலமைச்சர் சவால் விடுத்த நிலையில், அதற்கு அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டத்தில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சேலம் 5 ரோட்டில் நேற்று நடந்த திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து பேசினார். அப்போது பேசிய அவர் தமிழ்நாட்டிற்கு வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 9 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்காக, மத்திய பாஜக அரசு கொண்டு வந்த திட்டங்களை பட்டியலிட தயாரா என சவால் விடுத்திருந்தார். மேலும் பாஜகவின் செல்வாக்கு நாடு முழுவதும் சரிந்து வருவதாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த 9 ஆண்டுகால அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் மே 30 முதல் ஜூன் 30 வரை நாடு முழுவதும் பாஜக பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் வேலூர் பள்ளிகொண்டா அருகே கந்தனேரியில் இன்று தமிழக பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வி.கே.சிங் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர். இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு மகாராஷ்டிராவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். தமிழ்நாட்டிற்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு சென்னையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவின் முக்கிய தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து, சென்னை, கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் மத்திய அமைச்சர் அமித்ஷா உடனான பிரபலங்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் கலை, இலக்கியம், விளையாட்டு, தொழில்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த 25 முக்கிய பிரபலங்கள் பங்கேற்றனர்.
இதனையடுத்து, சென்னை கிண்டியில், அமித்ஷா உடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமித்ஷா வரும் போது மின் நிறுத்தம் ஏற்பட்டது தொடர்பாக நான் அரசியல் செய்ய விரும்பவில்லை. இதற்காக முழுக்க முழுக்க தமிழக அரசை குற்றம் சுமத்த முடியாது. இனி அடுத்த முறை இதுபோல் நடக்காமல் பார்த்துக்கொண்டாலே போதும் என்று கூறிய அவர், சேலத்தில் நேற்று நடந்த திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் மத்தியில் 9 ஆண்டுகால ஆட்சி குறித்து முதலமைச்சர் எழுப்பியிருந்த கேள்விக்கு பதிலளித்தார். அப்போது , 9 வருடத்தில் பாஜக செய்த சாதனைகளை பட்டியலிட்டு இன்று நடக்கும் பொதுக்கூட்டத்தில் நான் முதலமைச்சருக்கு பதிலடி கொடுக்கிறேன். அதேப்போல், நாங்கள் கேட்கும் கேள்விக்கும் முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும். பாஜக மீது முதலமைச்சருக்கு பயம் வந்துள்ளது என தெரிவித்தார்.
- பி.ஜேம்ஸ் லிசா










