மதுரை மாநகர் குதிரைப்படையில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வந்த குழந்தைசாமி (59) என்பவர் விஸ்வநாதபுரம் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் தனது மனைவி செல்வியுடன் (53) வசித்து வந்துள்ளார்.
இவர்களின் பிள்ளைகளான சத்ரியன் மற்றும் பிரதீபா ஆகிய இருவருக்கும் திருமணமாகி சென்னையில் வசித்து வருகின்றனர்.
குழந்தைசாமி இன்னும் 4 மாதத்தில் ஓய்வு பெற இருந்த நிலையில் அவருக்கு இருதய பிரச்சனை ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்து மருத்துவ விடுப்பில் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை குழந்தைசாமிக்கு காலை உணவு கொடுத்துவிட்டு அவரது மனைவி செல்வி குளிக்க சென்றுள்ளார். அப்போது குழந்தைசாமி (59) அறைக்குள் சென்று தூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தல்லாகுளம் காவல்துறையினர் குழந்தைசாமியின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நான்கு மாதத்தில் ஓய்வு பெற இருந்த நிலையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.







