”நானும் டெல்டாகாரன் தான்” – சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

வேளாண் மண்டலங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு நிச்சயம் அனுமதி அளிக்காது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமாக 3 நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. என்.எல்.சி…

வேளாண் மண்டலங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு நிச்சயம் அனுமதி அளிக்காது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமாக 3 நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. என்.எல்.சி மூன்றாவது நிலக்கரி சுரங்கத்தின் பெரும்பகுதி காவிரிப் படுகையை ஒட்டியே அமைந்துள்ள நிலையில், மீதமுள்ள 6 நிலக்கரி சுரங்கங்களை தஞ்சாவூர், அரியலூர், கடலூர் ஆகிய பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு விவசாயிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் நிலக்கரி சுரங்கங்கள் தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பி. ராஜா, கோ.வி.செழியன், விஜயபாஸ்கர், ஜவாஹிருல்லா, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.

இதையும் படியுங்கள் : ’அமெரிக்க வரலாற்றின் ஓர் இருண்ட காலம்’ – ஜாமீனுக்கு பின் ட்ரம்ப் பேச்சு 

இந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு சட்டமன்றத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார். அமைச்சரின் விளக்கத்திற்கு பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”இந்த செய்தியை கண்டு சட்டமன்ற உறுப்பினர்களை போலவே நானும் அதிர்ச்சிக்குள்ளானேன். செய்தி வெளியானதும், தொடர்புடைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பிரதமருக்கு கடிதம் எழுதினேன்.

மேலும் அந்த கடிதத்தை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு மூலம் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு வழங்க அறிவுறுத்தினேன். அந்த கடிதத்தின் மீது நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக மத்திய அமைச்சர் உறுதியளித்துள்ளார். நானும் டெல்டாகாரன் தான். நானும் உறுதியாக இருப்பேன். டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு நிச்சயம் அனுமதி வழங்காது” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.