இடையூர் வேங்கை வயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவுகளை கலந்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி பல்வேறு அமைப்புகள் சார்பில் இன்று கண்டன போராட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் இடையூர் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியல் இனத்து மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில், 15 தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் மனித கழிவுகளை கலந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக, மாவட்ட காவல்துறை சார்பில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, தீவிர விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை அந்த கிராமத்தைச் சேர்ந்த 70 பேரிடம் விசாரணை செய்து வாக்குமூலமும் பெறப்பட்டுள்ளது.
இதனையடுத்து , வேங்கைவயல் கிராமத்தில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவை கலந்து கீழ்தரமான செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று எச்சரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் இந்த சம்பவம் நடைபெற்று 15 தினங்களுக்கு மேலாகியும் இதுவரை குற்றவாளிகளை காவல் துறையினர் கைது செய்யாததை கண்டித்தும், உடனடியாக குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
அப்போது காவல்துறையினர் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று கூறியதை தொடர்ந்து, அதுவரை நடத்தப்பட்டு வந்த காத்திருப்பு போராட்டம் , ஆர்ப்பாட்டமாக மாற்றப்பட்டு, அதில் உண்மையான குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கண்டன கோஷங்கலும் எழுப்பப்பட்டன.









