தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

தீபாவளிக்கு அடுத்த நாள் அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை எனவும், நவம்பர் 18-ம் தேதி பணி நாளாகவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை…

தீபாவளிக்கு அடுத்த நாள் அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை எனவும், நவம்பர் 18-ம் தேதி பணி நாளாகவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை வருகிற 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளியையொட்டி, பட்டாசுகள், புத்தாடைகள் வாங்குவது என மக்கள் பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர். அத்துடன், பட்டாசு மற்றும் ஜவுளி கடைகளிலும் விற்பனை களைகட்டியுள்ளது.

இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை தீபாவளி வருவதால், சனிக்கிழமை ஒரு நாளும் சேர்ந்து வழக்கமான வார இறுதி விடுமுறை போல் முடிந்துவிடுமோ என்ற கலக்கம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாமல் அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்களிடமும் உள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில் கல்வி, வேலைவாய்ப்புக்காக வந்து தங்கியிருப்பவர்கள் தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

வெள்ளிக் கிழமை பயணத்தை தொடங்கினாலும், தீபாவளி தினமான ஞாயிறுக் கிழமை இரவே மீண்டும் கிளம்பினால் மட்டுமே மறுநாள் திங்கள் அன்று பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு வர முடியும். பண்டிகை முடியும் முன்பே கிளம்புவது ஒரு புறம் என்றால், ஒரே நாளில் லட்சக்கணக்கானோர் பயணம் மேற்கொள்வதால் பேருந்துகள், ரெயில்களில் நெருக்கடி உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே தீபாவளிக்கு மறுநாள் பொது விடுமுறையாக அரசு அறிவித்தால் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடிவிட்டு சிரமமின்றி ஊர் திரும்ப முடியும் என்று பலதரப்பினரும் கூறி வருகின்றனர். பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடுவதற்காக தமிழ்நாடு அரசும் இது குறித்து ஆலோசனை நடத்தியது. 

இந்நிலையில் தீபாவளிக்கு அடுத்த நாளான நவம்பர் 13-ம் தேதி அன்று பொது விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்ததாவது:

”இவ்வாண்டு தீபாவளியை 12.11.2023 அன்று கொண்டாடும் பொருட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 13.11.2023 அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள். பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 18.11.2023 அன்று பணி நாளாக அறிவித்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.” இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.