இந்துக்கள், புத்த மதத்தை சேர்ந்தவர்கள், ஜெயினர்கள், சீக்கியர்கள் தங்களது மத வழிபாட்டுத் தலங்களை அரசு தலையீடு இல்லாமல் நிர்வகிக்க உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இஸ்லாமியர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள் அரசு தலையீடு இல்லாமல் தங்களது வழிபாட்டுத் தலங்களை நிர்வகிப்பது போலவே இந்துக்கள், புத்த மதத்தை சேர்ந்தவர்கள், ஜெயினர்கள், சீக்கியர்கள் ஆகியோரும் தங்களது மத வழிபாட்டுத் தலங்களை எந்தவிதமான அரசு தலையிடும் இல்லாமல் நிர்வகிக்க உத்தரவிடக் கோரி பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசியல் சாசன உரிமைகளில் தலையிடும் வகையில் மனுவில் கோரிக்கை உள்ளது எனவும், இதை ஏற்க முடியாது எனவும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.
மேலும், பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாவிற்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. விளம்பரம் கிடைக்கும் என்பதற்காக இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்துள்ளதாகவும், வழக்கறிஞர் என்ற முறையில் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் எனவும் தலைமை நீதிபதி அறிவுறுத்தினார்.
தேவைப்பட்டால் இந்த கோரிக்கையை அரசிடம் முன்வைக்குமாறு தெரிவித்த நீதிபதி, இது போன்ற மனுக்களை எவ்வாறு பொதுநல மனுக்களாக தாக்கல் செய்யமுடியும், மத வழிபாட்டுத் தலங்கள் குறித்த விவகாரத்தில் உள்ள உரிமைகள் அரசியல் சாசனத்தில் தெளிவாக உள்ளது என தெரிவித்தார். மேலும் இது அரசின் கொள்கை தொடர்பானது என தலைமை நீதிபதி தெரிவித்தார்.







