ட்விட்டர் (எக்ஸ்) சமூக வலைத்தளம் தனது பயனர்களுக்கு புதிய சந்தாதாரர் திட்டம் ஒன்றைச் சோதனை முயற்சியாக வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்தே அடிக்கடி அதிரடியான பல மாற்றங்களை செய்து வருகிறார். சமீபத்தில் 1 நாளைக்கு பயனர்கள் குறிப்பிட்ட பதிவுகள் மட்டும் தான் பார்க்கமுடியும் என ஒரு மாற்றத்தை கொண்டு வந்தார். மேலும் புளூ டிக் பயன்படுத்துவோருக்கு கட்டணம், ட்விட்டரில் விளம்பரம் செய்து பொருளீட்டுதல் போன்ற மாற்றத்தை ஏற்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து ட்விட்டர் என்ற பெயரை எக்ஸ் (X) என மாற்றினார். அதன் லோகோவை மாற்றினார். மேலும் ஏற்கெனவே நடைமுறையிலுள்ள எக்ஸ் பிரீமியம் சேவைக்கு, இந்தியாவில் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ் பயனர்களுக்கு, ஆண்டு சந்தாவாக ரூபாய் 900-ம் இணைய பயனர்களுக்கு ரூபாய் 650-ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் தனது பயனர்களுக்கு புதிய சந்தாதாரர் திட்டம் ஒன்றைச் சோதனை முயற்சியாக வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தில் சந்தாத்தொகை செலுத்தாத பயனர்கள், இனிமேல் எக்ஸ் தளத்தில் பதிவிடவோ தாங்கள் காண்கிற ட்விட்டுகளுக்கு விருப்பக்குறியோ பின்னூட்டமோ ரீ-ட்விட்டோ உள்ளிட முடியாது என தெரிவித்துள்ளது. இதில் இணைய ஒரு ஆண்டுக்கான சந்தாத்தொகை, ஒரு அமெரிக்க டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Starting today, we're testing a new program (Not A Bot) in New Zealand and the Philippines. New, unverified accounts will be required to sign up for a $1 annual subscription to be able to post & interact with other posts. Within this test, existing users are not affected.
This…
— Support (@Support) October 17, 2023
இது ஒவ்வொரு நாட்டுக்கும் அந்த நாட்டின் பணமதிப்பேற்கேற்ப மாறும். ஆரம்பகட்டமாக இது பிலிப்பைன்ஸ் மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரிமீயம் இல்லாத பயனர்களுக்கு இந்தத் திட்டம் பொருந்தும். ஏற்கெனவே, பயனர்களாக இருப்பவர்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. `போலி பதிவுகள் (ஸ்பேம்), செயற்கையான கணக்குகள் (பாட்), பாரபட்சமான கையாளுகை ஆகியவற்றை முடக்கும் எங்களின் வெற்றிகரமான செயலுக்கு வலுவூட்டும் விதத்தில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதற்கென மிகக் குறைவான கட்டணமே வசூலிக்கிறோம். இந்தத் திட்டம் நிச்சயமாக லாபத்தை உயர்த்தும் நோக்கில் செயல்படுத்தவில்லை’ என எக்ஸ் தளத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.







