காஸா மருத்துவமனை மீதான தாக்குதல்: பிரதமர் நரேந்திர மோடி கண்டனம்!

காஸா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.  இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டு வருகிறது. நேற்றைய 11-வது…

காஸா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். 

இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டு வருகிறது. நேற்றைய 11-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இரு தரப்பிலும் பலி எண்ணிக்கை 4,000-ஐ கடந்துள்ளது.

இதற்கிடையே,  இஸ்ரேல் போர் விமானங்கள் தெற்கு காசா மீது நேற்று குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் காசா நகரில் உள்ள அல்-அக்லி மருத்துவமனையில் 500 பேர் உயிரிழந்தனர்.  இந்த கொடூர தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

காஸா பகுதியில் உள்ள மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணைய தலைவர் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றார்.  குற்றவாளிகள் பொறுப்பேற்க வேண்டும்.  காஸா நகரில் உள்ள அல் அஹ்லி அரபு மருத்துவமனை மீது நடத்தப்பட்ட பெரும் தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாக வோல்கர் டர்க் கூறினார்.

இந்த தாக்குதல் மிகவும் பயங்கரமானது.  இந்த தாக்குதலில், மருத்துவமனை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தஞ்சமடைந்த நோயாளிகள்,  சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அப்பாவி குடும்பத்தினர் கொல்லப்பட்டனர்.  இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது.  எனினும்,  இந்த குற்றச்சாட்டை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மறுத்துள்ளார்.

இந்நிலையில்,  காஸா மருத்துவமனையில் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.  மருத்துவமனையில் ஏற்பட்ட உயிரிழப்பு தனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகவும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்தனை செய்வதாகவும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். அத்துடன, தாக்குதலில் ஈடுபட்டவர்கள் உடனடியாக அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.  மோதலில் பொதுமக்களின் உயிரிழப்புகள் கவலைக்குரியதாக உள்ளதாகவும் பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.