சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாகமூட்டும் என்றும் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் ஓபிஎஸ் தள்ளப்பட்டுள்ளதாகவும் மூத்த பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 
தேர்தல் ஆணையத்திடம் இறுதி முடிவு
சென்னையில் கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் தனி நீதிபதி தீர்ப்பை ரத்து செய்தும், பொதுக்குழுவை நடத்தியது செல்லும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன்மூலம் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லத்தக்கதாக மாறியுள்ளது. இந்த தீர்ப்பு குறித்து நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சிக்கு அளித்த தொலைபேசிப் பேட்டியில் மூத்த பத்திரிகையாளர் பிரியன் கூறியதாவது,
“இபிஎஸ்-க்கு கிடைத்த உற்சாகமூட்டும் தீர்ப்பு. ஆனால் இதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்யும். இதில் இறுதி முடிவு எடுக்க வேண்டியது தேர்தல் ஆணையம் தான்.
2024க்கு முன்னதாக இரு தரப்பும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே அதிமுக தொண்டர்களின் மனநிலை” என்றார் மூத்த பத்திரிகையாளர் பிரியன். 
இபிஎஸ் வசம் அதிமுக
உயர்நீதிமன்றத் தீர்ப்பு குறித்து, அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
” 90% கட்சியினர் இபிஎஸ் வசம் இருப்பதை இந்த தீர்ப்பு உறுதிப்படுத்தி உள்ளது. இதை எதிர்த்து ஓபிஎஸ் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது.
அந்த மேல்முறையீட்டில் கூற தீர்ப்பு மாறலாம். என்றாலும் இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திடமே இருப்பதைப் பார்க்க முடிகிறது. தேர்தல் ஆணையமும், அந்த முடிவை உரிய காலத்தில் தான் அதாவது சின்னம் ஒதுக்கும் போது தான் எடுக்கும். 
இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை அதிமுக தொடங்கலாம். ஆனால் அதிமுக பொதுச் செயலாளராக போட்டியிடுவோரை, மாவட்ட செயலாளர்களில் 10 பேர் முன் மொழிய வேண்டும் என்றும் மேலும் 10 பேர் வழிமொழிய வேண்டும்
என்றும் கொண்டு வரப்பட்ட திருத்தம் இயற்கை நீதிக்கு எதிரானது. ஆகவே அதை எதிர்த்தும் வழக்கு தொடரக்கூடிய வாய்ப்பு உள்ளது” என்கிறார் ரவீந்திரன் துரைசாமி.
ஓபிஎஸ்-க்கு நிர்பந்தம் அதிகரிப்பு
அதிமுக விவகாரங்களை ஆரம்பம் முதலே உன்னிப்பாக கவனித்து வரும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த தொலைபேசிப் பேட்டியில்,
“எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான தீர்ப்பு இது. இதை ஓபிஎஸ் நிச்சயம் ஏற்க மாட்டார். ஆகவே போட்டி அதிமுகவை தொடங்குவார். புதிய நியமனங்களைச் செய்வார். தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும் வரை இது தொடரும்.
1989க்கு பிறகு அதாவது 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதிமுகவில் குழப்பம் நேர்ந்துள்ளது. அப்போது ஜெயலலிதா, திருநாவுக்கரசர் இடையே மோதல் ஏற்பட்டு, போட்டி அதிமுகவை 2 ஆண்டுகளுக்கு திருநாவுக்கரசர் நடத்தினார். அதே போல் ஓபிஎஸ், போட்டி அதிமுக நடத்தி, தொடர் நியமனங்களைச் செய்து தேர்தல் ஆணையத்திற்கு அழுத்தம் கொடுப்பார் என்றார். 
25 ஆண்டுக்கு பிறகு…
தொடர்ந்து பேசிய தராசு ஷ்யாம் கூறியது, 1989க்கு பிறகு 21ஏ விதி வந்த பிறகு கட்சி பெயர் பதிவு தேர்தல் ஆணையத்திடம் உள்ளது. அதிமுக யாருக்கு, சின்னம் யாருக்கு என்று முடிவு எடுக்க வேண்டியது தேர்தல் ஆணையம் தான். அண்மையில் ராம்குமார் ஆதித்தன் என்பவர் ஆர்.டி.ஐ. மூலம் அதிமுக தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு “தீவிர பரிசீலனையில் இருப்பதாக” மட்டும் தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.ஒட்டுமொத்தமாக உயர்நீதிமன்ற தீர்ப்பு இபிஎஸ்-க்கு ஆதரவு, ஆனால் அது அதிமுகவுக்கு நல்லதல்ல” என்று தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.
-ஜெயகார்த்தி







