சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பின் மூலம் அதிமுக என்கிற பந்து மீண்டும் எடப்பாடி பழனிசாமி பக்கம் வந்துள்ளது. அவர் அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளர் ஆனது, அந்த அதிகாரத்தை பயன்படுத்தி ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியிலிருந்தே நீக்கியது உள்ளிட்ட நடவடிக்கைகள் எல்லாம் சட்ட ரீதியில் செல்லும் என்பதை இந்த தீர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது. அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பு அக்கட்சியை ஜூன் 23ந்தேதிக்கு முந்தைய நிலைக்கு கொண்டு சென்ற நிலையில், தற்போது இருநீதிபதிகள் அமர்வு அளித்துள்ள தீர்ப்பு, ஜூலை 11ந்தேதி முதல் அதிமுகவில் தொடங்கிய புதிய அத்யாயத்திற்கு அங்கீகாரம் அளித்துள்ளது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமையா, இரட்டை தலைமையா என்கிற மோதல் கடந்த ஜூன் 23ந்தேதி பொதுக்குழுவில் பகிரங்கமாக வெடித்தது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் எரிச்சலடைந்து பாதியிலேயே வெளியேறும் அளவிற்கு எடப்பாடி பழனிசாமிக்கு பொதுக்குழு உறுப்பினர்களிடையே ஆதரவு இருந்தது. அடுத்த பொதுக்குழுவுக்கு அன்றே நாள் குறிக்கப்பட்டு ஜூலை11ந்தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக் குழு மீண்டும் கூடியது. கிட்டத்தட்ட 100 சதவீதம் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களால் நிரம்பியிருந்த அந்த பொதுக்குழுவில் கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம், வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் கடந்த 17ந்தேதி தீர்ப்பளித்தார். அதிமுகவில் ஜூன் 23ந்தேதிக்கு முந்தைய நிலை தொடர வேண்டும் என அவர் தனது தீர்ப்பில் கூறினார். பொதுக்குழு தொடங்கி, கட்சி அலுவலகம் வரை எல்லா விஷயமும் எடப்பாடி பழனிசாமிக்கே சாதகமாகவே இருந்து வந்த நிலையில் தனிநீதிபதி வழங்கிய இந்த தீர்ப்பு ஓபிஎஸ் தரப்பினருக்கு பெரும் உற்சாகத்தை அளித்தது. தற்போதும் தாம்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என கூறிவந்த ஓபிஎஸ் தனிநீதிபதி அளித்த தீர்ப்பின் மூலம் அதனை உறுதிப்படுத்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தனி நீதிபதி அளித்த தீர்ப்பு இபிஎஸ் தரப்பிற்கு பின்னவடைவாக பார்க்கப்பட்டாலும் அப்போதும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற அதிகாரம் எடப்பாடி பழனிசாமி வசம்தான் இருந்தது. தனது ஒப்புதல் இல்லாமல் அதிமுகவில் எந்த ஒரு சிறிய நடவடிக்கையையும் ஓ.பன்னீர்செல்வத்தால் மேற்கொள்ள முடியாது என்கிற வாய்ப்பையும் எடப்பாடி பழனிசாமி பெற்றிருந்தார். பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், 62 அதிமுக எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமி பக்கமே நின்றதால், மீண்டும் பொதுக்குழுவைக் கூட்டிக்கூட அவரால் அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக தம்மை நிலைநாட்ட முடியும் என்கிற நிலையும் இருந்தது. இதனால் தனி நீதிபதியின் தீர்ப்பு சாதகமாக இருந்தும் கட்சியில் ஓ.பன்னீர்செல்வத்தால் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை. ”அன்புச் சகோதரர் எடப்பாடி பழனிசாமியுடன் மீண்டும் இணைந்து செயல்பட விரும்புகிறேன், இரட்டைத் தலைமையாக இல்லாமல் கூட்டுத் தலைமையாக இருப்போம்” என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்ததிலிருந்தே ஓபிஎஸ்க்கு இருந்த நெருக்கடி தெரியவந்ததாக அரசியல் நோக்கர்கள் கருதினர். கூட்டுத் தலைமையாக செயல்பட எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமல்ல, சசிகலா, தினகரன் ஆகியோருக்கும் அழைப்பு விடுத்தார் ஓபிஎஸ். அவரது அழைப்புக்கு செவிசாய்ப்பது போன்ற கருத்துக்களை சசிகலா, தினகரன் ஆகிய இருவரும் தெரிவித்திருந்தனர்.
ஓபிஎஸ், சசிகலா, தினகரன் என மூவரும் ஓரணியாக திரளும் சாத்தியக் கூறுகள் தெரிந்தும், அதை சிறிதும் கண்டுகொள்ளாததுபோல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் அணுகுமுறைகள் இருந்தன. தொடர்ந்து தனது ஆதரவாளர்களை தக்கவைத்துக்கொண்டு தனது அடுத்தக்கட்ட சட்டப்போராட்டத்தில் கவனம் செலுத்தினார். ஜூலை 11ந்தேதி அதிமுக பொதுக் குழு செல்லாது என்கிற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன்அமர்வு முன்பு எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதே சமயம் பகீரத முயற்சிகள் செய்தும் எடப்பாடி பழனிசாமியிடமிருந்து ஆதரவாளர்களை தங்களது பக்கம் ஓபிஎஸ் தரப்பால் கொண்டுவர முடியவில்லை. உசிலம்பட்டி தொகுதி எம்.எல்.ஏ அய்யப்பன் மற்றும் ஆங்காங்கே சில நிர்வாகிகள் தவிர வேறு யாரும் அணி மாறவில்லை. எனவே இரண்டு நீதிபதிகள் அமர்வு வழங்கும் தீர்ப்பு ஓபிஎஸ் தரப்பினரால் அதிகம் உற்றுநோக்கப்பட்டது.
இந்நிலையில்தான் ஜூலை11ந்தேதி அதிமுக பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று அளித்துள்ள தீர்ப்பு ஓபிஎஸ் தரப்பிற்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் மூலம், அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அதிமுக விதி எண் 20ல் கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற பொதுக்குழுவின்போது கொண்டு வரப்பட்ட மாற்றங்கள் அனைத்தையும் ரத்து செய்து, மீண்டும் பொதுச் செயலாளர் பதவியை கடந்த ஜூலை11ந்தேதி பொதுக்குழுவில் ஏற்படுத்தியதற்கு நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வின் தீர்ப்பு சட்டரீதியிலான அங்கீகாரம் கொடுத்துள்ளது.
கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடிபழனிசாமி கடந்த ஜூலை11ந்தேதி முதல் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் செல்லும் என தீர்ப்பு தெரிவிக்கிறது. ஜூலை 11ந்தேதி பொதுக்குழுவில் கட்சியின் பொருளாளர் பதவியிலிருந்து ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கிவிட்டு, முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை பொருளாளர் ஆக்கியது, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கியது உள்பட இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அதிரடி நடவடிக்கைகள் அனைத்தும் செல்லும் என்பது சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் மூலம் தெளிவாகியுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் அதிமுகவின் எம்.பியுமான ரவீந்திரநாத், மற்றொரு மகன் ஜெயபிரதீப், ஓ.பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உள்ளிட்டோரையும் எடப்பாடி பழனிசாமி அதிமுகவிலிருந்து நீக்கியிருந்தார். அந்த உத்தரவுகளும் தற்போது செல்லுபடியாகியிருக்கின்றன.
ஜூலை 11ந்தேதி பொதுக் குழு முடிந்த சில நாட்களில் கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக தனக்குள்ள நியமன அதிகாரங்களைப் பயன்படுத்தி சில முக்கிய நியமனங்களை எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டார். அந்த நியமனங்களின் அடிப்படையில் அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர்களாக இபிஎஸ் ஆதரவாளர்களான கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் பதவியில் தொடர்வது உறுதியாகியுள்ளது. மேலும் கொங்கு மண்டலத்தில் எடப்பாடி பழனிசாமியின் தளபதியாக இருக்கும் எஸ்.பி.வேலுமணியே தற்போது அதிமுகவின் தலைமை நிலையச் செயலாளர். அதிமுகவின் அமைப்புச் செயலாளர்களாக, முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ, கே.பி.அன்பழகன், கடம்பூர் ராஜூ, ஓ.எஸ்.மணியன், ராஜேந்திர பாலாஜி, பெஞ்சமின், உள்ளிட்டோரை நியமித்து கடந்த ஜூலை 13ந்தேதி எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட உத்தரவுக்கும் சட்டரீதியிலான அங்கீகாரம் தற்போது கிடைத்துள்ளது. இதன் மூலம் அதிமுகவின் தலைமை நிலைய நிர்வாகிகள் தற்போது முழுமையாக எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களாக உள்ளனர். இரட்டைத் தலைமையும் வேண்டாம், கூட்டுத்தலையும் வேண்டாம், எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் ஒற்றை தலைமையே வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். தற்போது அதிமுகவில் அந்த நிலையே நிலவுகிறது என்பதை சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது. அதிமுகவில் தான் ஒரு அசைக்க முடியாத சக்தி என்பதை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார்.
அதே சமயம் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்தால் அப்போது கிடைக்கும் தீர்ப்பை பொறுத்தும், அதிமுக விவகாரத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொள்ள உள்ள முடிவுகளைப் பொறுத்தும் அக்கட்சியில் மீண்டும் அதிரடி திருப்பங்கள் நிகழுமா என்கிற கேள்வியும் தமிழக அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.