சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது.
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்புவின் நடிப்பில் திரைக்கு வரவுள்ள படம் தான் வெந்து தணிந்தது காடு. சித்தி இடனானி,ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்னேஷ்னல் நிறுவனம் தயாரித்துள்ளது. ‘விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படத்தைத் தொடர்ந்து, இப்படத்திலும் இசைப்புயல் ஏ. ஆர். ரகுமானே இசையமைக்கிறார்.
ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளியான இரு பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இப்படத்தின் டீசர் திரை ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (செப் 2) சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் மாலை 5 மணி அளவில் மிகப் பிரமாண்டமாக நடக்கவுள்ளது.
இந்த விழாவில் இசையமைப்பாளர் ஏ. ஆர்.ரகுமான் படத்தில் இடம்பெறவுள்ள 4 பாடல்களையும் ஒவ்வொன்றாக மக்கள் முன் இசைத்து வெளியிடவுள்ளார். மேலும் இவ்விழாவிற்குச் சிறப்பு விருந்தினர்களாக கமல்ஹாசனை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நேரில் சென்று அழைப்பிதழை வழங்கியுள்ளார்.
இவ்விழாவில், கமல்ஹாசன் கலந்து கொள்ளும் பட்சத்தில் வேட்டையாடு விளையாடு பாகம் 2 குறித்து அறிவிப்பையும் அப்படத்தையும் வேல்ஸ் பிலிம் இண்டர்னேஷ்னல் நிறுவனமே தயாரிக்கும் எனும் அறிவிப்பையும் வெளியிடுவார்கள் எனக் கோலிவுட் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்படுகிறது. இதனால், இந்த இசை வெளியீட்டு விழா ரசிகர்கள் மத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.







