பதினாறு கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கட்டராஜாவிற்கு தூக்குத் தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திப்பிராஜபுரம் அருகே உள்ள சென்னியமங்கலத்தைச் சேர்ந்த ரவுடி ராஜா மீது பதினாறு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. கட்டராஜா என அழைக்கப்படும் இவர் அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்நாதன் என்பவரை கடந்த 2013 ஆம் ஆண்டு கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு கும்பகோணத்தில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. முதன்மைக் குற்றவாளியான கட்ட ராஜாவிற்கு தூக்குத் தண்டனையும் அவரின் கூட்டாளிகள் ஆறுமுகம், செல்வம் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி பெஞ்சமின் ஜோசப் உத்தரவிட்டார்.
மேலும், கொலை வழக்கில் தொடர்புடைய மாரியப்பன், மனோகரன் ஆகியோர் உயிரிழந்து விட்டதால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதனையடுத்து, நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட கட்டராஜா, பலத்த பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.







