தமிழ்நாட்டில் கொரோனா பாதித்த முதல் நோயாளிக்கு சிகிச்சையளித்த ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, 2 ஆண்டுகளுக்குப் பிறகு கொரோனா நோயாளிகள் இல்லாத மருத்துவமனையாக மாறியுள்ளது.
தமிழ்நாட்டில் 2020ஆம் ஆண்டு மார்ச் 7ம் தேதி கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தொற்று பாதித்த முதல் நபர், ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றார். அன்று முதல் இன்று வரை 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.
அதில் 96 சதவீத நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4 சதவீதம் பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கொரோனா இரண்டாம் அலை உச்சத்தில் இருந்த கடுமையான காலகட்டத்திலும் ஆயிரக்கணக்கானோரின் இன்னுயிரை இம்மருத்துவமனை காத்துள்ளது.
இந்த நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று கடைசி நபரும் குணமடைந்து வீடு திரும்பியதால், 2 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கொரோனா தொற்றில்லாத நிலையை இம்மருத்துவமனை எட்டியுள்ளது.








