அமெரிக்க பிணைக்கைதிகள் இருவரை விடுவித்த ஹமாஸ்!

ஹமாஸ் தனது பிடியில் இருந்த அமெரிக்கர்கள் இருவரை நேற்று (20.10.2023) விடுவித்துள்ளது.  ஜூடித் டாய் ரானன் மற்றும் அவரது மகள் நாட்டாலி ரானன் இருவரும் 14 நாள்களுக்கு பிறகு மீண்டும் இஸ்ரேல் திரும்பியுள்ளனர். அவர்களது…

ஹமாஸ் தனது பிடியில் இருந்த அமெரிக்கர்கள் இருவரை நேற்று (20.10.2023) விடுவித்துள்ளது. 

ஜூடித் டாய் ரானன் மற்றும் அவரது மகள் நாட்டாலி ரானன் இருவரும் 14 நாள்களுக்கு பிறகு மீண்டும் இஸ்ரேல் திரும்பியுள்ளனர். அவர்களது உடல் நிலை குறித்த தகவல்கள் எதுவுமில்லை. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், விடுவிக்கப்பட்ட இரண்டு பேரிடமும் அலைபேசி வழியாகப் பேசி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். கத்தார் மற்றும் எகிப்து, குடிமக்களை விடுவிக்கக் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த நடவடிக்கையை, ஹமாஸ் எடுத்துள்ளதாகவும் இன்னும் நிறைய பேர் விடுவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் நம்பப்படுகிறது. காஸாவின் எல்லையில் விடுவிக்கப்பட்ட இருவரையும் இஸ்ரேல் இராணுவம் மீட்டு மத்திய இஸ்ரேல் இராணுவத் தளத்திற்கு கொண்டு சென்றனர். இஸ்ரேலில் விடுமுறையைக் கழிப்பதற்காக வந்திருந்த தாயும் மகளும் அக்.7 இஸ்ரேலின் எல்லையில் கிபூஸ் பகுதியில் ஹமாஸ் குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டனர்.

மனிதாபிமான அடைப்படையில் நடந்த இந்த இருவரின் விடுதலை, கத்தாரின் இருதரப்புக்குமான தொடர் பேச்சுவார்த்தையால் சாத்தியமாகியுள்ளது. இஸ்ரேலியர்கள், இரட்டை குடியுரிமை உள்ளவர்கள், வெளிநாட்டினர் என 203 பேர் ஹமாஸ் பிடியில் இருப்பதாக இஸ்ரேல் தெரிவிக்கிறது. இதில் கிட்டதட்ட 20 பேர் குழந்தைகள் மற்றும் 10 முதல் 20 பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் இருக்கலாம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.