சென்னை அடுத்த எண்ணூரில் கொசஸ்தலை ஆறு மஞ்சள் நிறமாக மாறியதால்
மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் எட்டு கிராம மீனவர்கள் சிறிய படகுகள் வாயிலாக
மீன் பிடித்து வருகின்றனர். இந்நிலையில், திடீரென கொசத்தலை ஆற்றில்
வரக்கூடிய நீர் மஞ்சள் நிறமாக மாறியிருப்பதால் மீனவர்கள் மீன் பிடிப்பதை நிறுத்திவிட்டு கரை திரும்பிவிட்டனர்.
இது சம்பந்தமாக அந்த பகுதி மீனவர்கள் கூறுகையில், ஆற்றை சுற்றியுள்ள
பகுதியில் செயல்படும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும்
கழிவு நீர் ஆற்றில் கலப்பதினால் தான் இதுபோன்று மஞ்சள் நிறத்தில் நீர் மாறியிருப்பதாகவும், இதனால் அந்த பகுதியில் மீன் பிடி தொழில் பாதிக்கப்படுவதாகவும் மீனவர்கள் கூறுகின்றனர். மேலும் இதுபோல எண்ணெய் கலந்த நீர் இந்த பகுதியில் கலக்கும்போது மீன்கள் வரத்து குறைவதோடு, மீன்கள், இறால், நண்டு போன்றவற்றின் இனப்பெருக்கம் கூட பாதிக்கப்பட்டு முற்றிலுமாக மீன்வளம் சீரழியும் நிலை ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இது சம்பந்தமாக மீன்வளத்துறை அதிகாரியிடம் புகார் அளித்தால் அவர்கள் பொருட்படுத்தவில்லை என மீனவர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண கொசஸ்தலை ஆற்று பகுதியில் இயங்கக்கூடிய தொழிற்சாலைகளை தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. அதோடு, இது போன்ற எண்ணெய் கலந்த மஞ்சள் நிற கழிவு நீர் மீண்டும் கொசஸ்தலை ஆற்றில் கலக்காத அளவிற்கு தமிழக அரசும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும் உடனடி நடவடிக்கை எடுத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்று அந்த பகுதியில் உள்ள மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
A.SOWMIYA APPARSUNDHARAM.








