குஜராத் கலவரத்தின் போது பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 11 பேரை முன் விடுதலை செய்தது பெண் இனத்திற்கு மாபெரும் அநீதி என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குஜராத் இனப் படுகொலை வழக்கில் கலவரக்காரர்கள், பில்கிஸ் பானு உள்ளிட்ட 17 முஸ்லிம் பெண்களை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு 11 பெண்கள் கொல்லப்பட்டனர். இக்கொடூர கொலைக் குற்றவாளிகள் 11 பேருக்கு 2008 இல் சி.பி.ஐ. நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. 2018 இல் குற்றவாளிகளின் ஆயுள் தண்டனையை மும்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இந்நிலையில் கொலையாளிகள் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என கோரியதை ஏற்றுக்கொண்டு 75 வது சுதந்திர தினம் கொண்டாடுவதை ஒட்டி குஜராத் மாநில பா.ஜ.க. அரசு முன் விடுதலை செய்திருந்தது” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
குஜராத் மாநில பா.ஜ.க. அரசின் இத்தகைய செயல் தலைகுனியச் செய்கிறது. இது ஒட்டுமொத்த பெண் இனத்திற்கும் இழைக்கப்பட்டுள்ள அநீதி என்று விமர்சித்த வைகோ, நாட்டின் 75ஆவது விடுதலை நாள் விழாவில் செங்கோட்டையில் தேசியக் கொடியை உயர்த்தி பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையில், பெண்களின் பாதுகாப்பு, மரியாதை, அதிகாரமளித்தல் போன்றவற்றை குறிப்பிட்டார். ஆனால் இவர்கள் சொல்லுக்கும் செயலுக்கும் துளிகூட தொடர்பு இல்லாதவர்கள் என்பதை குஜராத் கொலையாளிகள் முன்விடுதலை மூலம் மீண்டும் நிருபணம் ஆகிவிட்டது என்று விமர்சித்தார்.
மேலும், “குஜராத் கொலைக் குற்றவாளிகள் முன்விடுதலை கடும் கண்டனத்திற்குரியது. குஜராத் மாநில அரசு தமது உத்தரவை திரும்பப் பெற வேண்டும். வன்முறை நடத்திய கொலையாளிகளை மீண்டும் சிறையில் தள்ள வேண்டும்” என வைகோ தெரிவித்துள்ளார்.







