மேகதாது அணை திட்டத்தை எதிர்த்து தமிழ் நாடு சட்டமன்றத்தில் இன்று முதலமைச்சர் விஜய் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். இந்த தீர்மானத்திற்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், விசிக, பாமக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில் எதிர்ப்பு எதுவும் இல்லாததால் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பையும், 2018-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் மதிக்காமல் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட தன்னிச்சையாக முனையும் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தனித்தீர்மானத்தைக் கொண்டு வந்து அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றி இருப்பது பாராட்டுக்குரியது.
தமிழ்நாட்டின் நீர் உரிமையையும், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் மேகதாது விவகாரத்தில் அரசியல் மனமாச்சரியங்களை ஒதுக்கிவிட்டு அனைவரும் ஓரணியாக நின்று ஒருமித்த குரலாக ஒலித்த தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் மனதாரப் பாராட்டுகிறேன்”. என்று அவர் தெரிவித்துள்ளார்.




