ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அரசியல் பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் நேற்று கூறியதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை நேற்று சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் சுமார் அரை மணி நேரம் அவருடன் பேசினார். இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், ஆளுநருடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என தெரிவித்தார். எனினும் இந்த சந்திப்பின்போது அரசியல் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகக் கூறினார்.
ஆளுநருடனான ரஜினியின் இந்த சந்திப்பு குறித்து அரசியல் கட்சியினர் பல்வேறுவிதமான கருத்துக்களைக் கூறி வருகின்றனர். ஆளுநர் மாளிகை அரசியல் பேசும் இடமாக மாறிவிடக்கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்தார்.
இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த வைகோவிடம், இந்த சந்திப்பு குறித்து கேட்டபோது, ரஜினிகாந்த் சொல்வது யாருக்கும் புரியவில்லை என்றார். ரஜினிக்கே அவர் சொல்வது புரியவில்லை என்றும் வைகோ விமர்சித்தார். அரசியலுக்கு வாரேன் சொன்னார், கட்சிக்காக ஆட்களை சேர்த்ததுக்கு அப்பறம் அரசியலுக்கு வரவில்லை என்று ரஜினி தெரிவித்தார் எனவே அவர் சொல்வதை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று வைகோ கூறினார்.
மதிமுக புத்துணர்ச்சி பெற்று தமிழகத்தின் அரசியல் சக்தியை தீர்மானிக்கும் அளவிற்கு உள்ளதாக தெரிவித்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, மதிமுகவின் கோட்டை கோவை எனவும் இங்கிருந்து சுற்றுபயணத்தை தொடங்குவதாகவும் கூறினார்.
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் சிந்தனை கொண்ட கட்சிகளை வீழ்த்த திமுகவுடன் கொள்கை அடிப்படையில் மதிமுக கூட்டணி வைத்திருப்பதாகக் கூறிய வைகோ, இந்தியாவிலே சிறப்பான ஆட்சியை திமுக நடத்தி வருவதாக பாராட்டு தெரிவித்தார்.
உணவு பண்டங்களுக்கு ஜி.எஸ்.டி வரியை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதால் பொதுமக்கள்தான் பாதிப்பு அடைந்துள்ளதாகக் கூறிய வைகோ, பாதிப்பு அதானிகளுக்கும், அம்பானிகளுக்கும் அல்ல என்றார்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வால் அனைத்துப்பொருட்களின் விலையும் உயர்வதாகவும், இந்த விலைவாசி உயர்வால் நாளுக்கு நாள் மத்திய பாஜக அரசு மீது மக்களிடையே வெறுப்பு அதிகரித்து வருவதாகவும் வைகோ விமர்சித்தார்.
பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகளை பேச அனுமதிக்க வேண்டுமென மாநிலகங்களவை தலைவர் வெங்கையா நாயுடு சொன்னது சரி தான். இது அவருடைய அரசியல் பண்பு குறித்து கண்பிக்கிறது என்றும் ஆளும் அரசு அதை ஏற்க வேண்டும் என்றும் வைகோ தெரிவித்தார். 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகளில் தேசிய கொடி ஏற்றுவது வரவேற்க கூடிய ஒன்றுதான் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.







