பிரபல பட்டிமன்ற பேச்சாளர் நெல்லை கண்ணன் வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் காலமானார். அவரது இறுதிச்சடங்கு நாளை பிற்பகல் 1 மணிக்கு நடைபெற இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வந்த நெல்லை கண்ணன் இன்று காலமானார். விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் தமிழ் மீது தனியாத ஆர்வம் கொண்டவராக இருந்து வந்த அவர், பாரதி பாடல்கள், தமிழ் இலக்கிய நூல்கள் என அனைத்தையும் கற்றுத் தேர்ந்தவர். பேச்சாற்றல் மிக்கவர் என்பதால் ஏராளமான பட்டிமன்றங்களில் கலந்து கொண்டவர். அரசு தொலைக்காட்சியில் பட்டிமன்ற நடுவராகப் பலமுறை செயல்பட்டுள்ளார்.
அண்மைச் செய்தி: ‘நெல்லை கண்ணன் மறைவு; கி.வீரமணி இரங்கல்’
மேலும், காங்கிரஸ் கட்சியில் தீவிர ஈடுபாடு கொண்ட இவர் இளம் வயது முதலே கட்சியில் இணைந்து பணியாற்றியவர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகவும், துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இந்நிலையில், தமிழ் கடல் நெல்லை கண்ணன் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி தமிழ் உணர்வாளர்கள் மற்றும் பட்டிமன்ற ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது இறுதிச்சடங்கு நாளை பிற்பகல் 1 மணிக்கு நடைபெற இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் கடல் நெல்லை கண்ணன் மறைவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.








