புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்காத மத்திய அரசைக் கண்டிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது புதுச்சேரி மாநில மாநாடு நேற்றும், இன்றும் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் டி.ராஜா கலந்துகொண்டார். இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த அவர், புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து கிடைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடி வருவதாகத் தெரிவித்தார். மேலும், பாராளுமன்ற நிலைக்குழு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் மத்திய அரசு புறக்கணிப்பதைக் கண்டிக்கின்றோம். எனத் தெரிவித்த அவர், ஆளுநர் மாளிகை மத்திய அரசில் எந்த கட்சி ஆட்சியிலிருந்தாலும் அந்த கட்சியின் கேந்திரமாகச் செயல்படுவதைக் கண்டிக்கின்றோம் எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்தியா முழுவதும் தனது கட்சியின் ஆட்சியை எல்லா பகுதிகளிலும் பாஜக புகுத்த முயல்வதாகக் குற்றம்சாட்டினார். மேலும், இந்தியாவின் பன்முகத் தன்மையைச் சீர்குலைக்க பாஜக முயல்வதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பதாகவும் தெரிவித்த அவர், பாஜக எதிர்க்கட்சிகளை ஒழிக்க சி.பி.ஐ, வருமானவரித்துறை உள்ளிட்ட அமைப்புகள் மூலம் மிரட்டி வருவதாகவும் தெரிவித்தார்.
அண்மைச் செய்தி: ‘தமிழ் கடல் நெல்லை கண்ணன் காலமானார்; நாளை பிற்பகலில் இறுதிச்சடங்கு’
கட்சியை விமர்சனம் செய்பவர்கள் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்து பேச்சு உரிமை மற்றும் எழுத்து உரிமையை நசுக்கும் பணியை பாஜக நடத்தி வருகின்றது. அதை ஒடுக்கும் பணியில் நாங்கள் முனைந்து வருகின்றோம் எனக் குறிப்பிட்ட அவர், மோடி அரசாங்கம் பின்பற்றும் பொருளாதார கொள்கை நாட்டு மக்களுக்கு எதிரானது என்றும் மாற்றுப் பொருளாதாரக் கொள்கையை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி வருவதாகக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், 2024-ல் நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் இந்திய வரலாற்றில் முக்கியமான தேர்தலாக இருக்கும் எனத் தெரிவித்த அவர், பாஜகவை ஆட்சியிலிருந்து இறக்க வேண்டும். புதுச்சேரியிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் எனக் கூறினார்.








