ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் டெல்லி பயணம்? – அமித்ஷாவை சந்திக்க திட்டம்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை டெல்லி சென்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-ம் ஆண்டுக்கான முதல் ஆளுநர் உரை நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.…

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை டெல்லி சென்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-ம் ஆண்டுக்கான முதல் ஆளுநர் உரை நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. அப்போது உரையாற்றிய ஆளுநர் ரவி, அரசு கொடுத்த உரையின் சில பகுதிகளை தவிர்த்து, சில பகுதிகளை திணித்து படித்ததாக சர்ச்சை எழுந்தது.

இதையடுத்து உடனடியாக முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் வாசித்த வார்த்தைகளை அவை குறிப்பிலிருந்து நீக்கப்படுவதாக தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இதனையறிந்த ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து உடனடியாக வெளியேறினார்.

இதன்தொடர்ச்சியாக கடந்த 12-ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை திமுக குழுவினர் சந்தித்து பேசினர். அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சார்பில் ஆளுநர் ரவி மீதான புகார் மனுவும் குடியரசுத் தலைவரிடம் கொடுக்கப்பட்டது. இதேபோன்று, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் புகார் மனுவும் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.