இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஐதராபாத்தில் இன்று தொடங்குகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. அதன்படி இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியா- இலங்கை இடையில் நடந்த 3 ஒரு நாள் போட்டி மற்றும் டி 20 போட்டி தொடர்கள் இரண்டையும் இந்திய அணி கோப்பையை வென்று வெற்றி கொண்டாட்டத்தில் உள்ளது. இலங்கைக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளிலும் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அதே உத்வேகத்துடன் இன்று இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது.
இந்த போட்டியில் முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் விலகி இருப்பதால் சூர்யகுமார் யாதவுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைப்பது உறுதியாகி விட்டது. அத்துடன் டி20 போட்டி போன்று ஒரு நாள் கிரிக்கெட்டுக்கான அணியிலும் தனது இடத்தை தக்கவைக்க சூர்யகுமாருக்கு சரியான வாய்ப்பாக இது இருக்கும்.
பேட்டிங்கில் ரோகித் சர்மாவும், சுப்மான் கில்லும் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆடுவதால், இஷான் கிஷன் மிடில் வரிசையில் பயன்படுத்தப்படுவார் என்று தெரிகிறது. பந்து வீச்சில் முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், குல்தீப் யாதவ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த தொடரில் இருந்து சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் அக்ஷர் பட்டேல் ஏற்கனவே விலகி விட்டார். அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் அல்லது ஷபாஸ் அகமது ஆகியோரில் ஒருவருக்கு இடம் கிடைக்கலாம்.
நியூசிலாந்து அணியில் கிளென் பிலிப்ஸ், டிவான் கான்வே, டாம் லாதம், டேரில் மிட்செல் ஆகியோர் பேட்டிங்கிலும், பிரேஸ்வெல், சான்ட்னெர், பெர்குசன் உள்ளிட்டோர் பந்து வீச்சிலும் நம்பிக்கை அளிக்கிறார்கள். பெரும்பாலான வீரர்களுக்கு இந்திய மண்ணில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் இருப்பதால் இந்திய அணிக்கு கடும் சவால் அளிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
இந்தியா அணியில், ரோகித் சர்மா (கேப்டன்) சுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர் அல்லது ஷபாஸ் அகமது, குல்தீப் யாதவ் அல்லது யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
நியூசிலாந்து அணியில், பின் ஆலென், டிவான் கான்வே, மார்க் சாப்மேன் அல்லது ஹென்றி நிகோல்ஸ், டேரில் மிட்செல், டாம் லாதம் (கேப்டன்), கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னெர், ஹென்றி ஷிப்லி அல்லது டக் பிரேஸ்வெல், ஜேக்கப் டப்பி அல்லது பிளேர் டிக்னெர், லோக்கி பெர்குசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.







