முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம்

சட்டப்பேரவையில் தனி அணி – ஓ.பி.எஸ் வியூகம்


விக்னேஷ்

அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், சட்டப்பேரவையில் தனி அணியாக செயல்பட திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் வரும் 17 ஆம் தேதி தொடங்கும் என சட்டப்பேரவையின் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார். தேதி அறிவித்த மறு நிமிடமே அனைவர் மத்தியிலும் எழுந்த கேள்வி ஒன்று தான். அதிமுக இரண்டாக செயல்படும் சூழலில் கடந்த காலத்தை போலவே இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் இருவரும் அருகருகே அமர்வார்களா ? அல்லது இருக்கைகளின் இடம் மாற்றப்படுமா ?என்பது தான். இதே கேள்வி பேரவைத் தலைவரிடமும் செய்தியாளர்கள் மூலமாக எழுப்பப்பட்டது. ஆனால் முன்னாள் முதலமைச்சர்களான ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் ஆகிய இருவருக்கும் உண்டான மரியாதை முறையாக வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

சட்டப்பேரவையில் இருக்கை எங்கே?

அதிமுகவில் எழுந்த ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். அதிமுக செயற்குழு – பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதோடு, ஓ.பி.எஸ் உட்பட அவருடைய ஆதரவாளர்களும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டனர். அந்த பொதுக்குழு செல்லாது என ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த பரபரப்பான காலகட்டத்தில் தான் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 17 ஆம் தேதி கூடுகிறது. பிரதான எதிர்க்கட்சியான

அதிமுக இரண்டாக செயல்படும் சூழலில் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கும் அதிமுக எம்.எல்.ஏக்களாக செயல்படுவார்களா ?

அவர்களுக்கு இருக்கை எந்த அடிப்படையில் ஒதுக்கப்பட உள்ளது உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன.

ஓபிஎஸ் தர்மயுத்தம்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி காலமான நிலையில் நிதியமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக பதவியேற்றார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக படிப்படியாக வி.கே.சசிகலாவின் கட்டுப்பாட்டில் வந்து, முதலமைச்சராக பதவியேற்க வி.கே. சசிகலா தயாரான நிலையில்,  ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்து தர்மயுத்தத்தை தொடங்கினார். செம்மலை,  மாஃபாய் கே. பாண்டியராஜன் உட்பட 10 எம்.எல்.எக்கள் ஓ.பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தத்திற்கு ஆதரவாக இருந்தனர்.

அப்போது அதிமுக, இப்போது திமுக

சசிகலாவை முதலமைச்சராக்குவதற்கான பணிகள் தொடங்கிய நிலையில்
சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாக சிறைக்கு செல்லும் சூழல் வந்தது. அதன் பின் அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட  எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்றார். 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி அவர் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார். ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்தனர். இருப்பினும் போதிய ஆதரவு இருந்ததால் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றார். இந்த காலகட்டத்திலும் அதிமுக இரண்டாக செயல்பட்ட நிலையில் சட்டப்பேரவையில் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏக்களுக்கு இருக்கைகள் மாற்றப்பட்டன. முதல் இரண்டு வரிசையில் அமைச்சர்கள் அமர்ந்திருக்கும் நிலையில் 4 வது வரிசையில் தான் ஓ.பன்னீர்செல்வத்திற்கே இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

அப்போது அதிமுகவின் தனி அணியாக ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏக்கள் செயல்பட்டு கொண்டிருந்தனர். அதே நிலை தான் தற்போதும் உருவாகியிருக்கிறது.

ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால் அப்போது அதிமுக ஆட்சி. இப்போது திமுக ஆட்சி.

ஒற்றைத் தலைமை விவகாரம், பொதுக்குழு கூட்டம், நீதிமன்றத்தில் வழக்கு, தேர்தல் ஆணையத்தில் புகார், புதிய நிர்வாகிகள் நியமனம் என அதிமுகவின் அடுத்தடுத்த நகர்வுகள் உச்சகட்டத்தை எட்டியிருக்கின்றன. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவின் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்  தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். அது தொடர்பான கடிதமும் சட்டப்பேரவை தலைவரிடம் வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவின் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய

தேர்தல் ஆணையம் எந்தமுடிவும் எடுக்காத காரணத்தினால் பேரவைத் தலைவர் அப்பாவும் இது தொடர்பாக எந்த முடிவையும் எடுக்கவில்லை

என்ற தகவல் கிடைத்திருக்கிறது. அதே நேரத்தில் ஓ.பி.எஸுடன் இணைய 100 சதவிகிதம் வாய்ப்பில்லை என்ற எடப்பாடி பழனிசாமியின் சமீபத்திய பேட்டி இருவரும் அருகருகே அமரப்போவதில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது.

 

முதல் வரிசையில் ஓபிஎஸ் இருக்கை

சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்பதாலும், முன்னாள் முதலமைச்சர் என்பதாலும் எதிர்க்கட்சியின் முதல் வரிசையிலேயே ஓ.பன்னீர்செல்வத்திற்கு இருக்கை ஒதுக்கப்பட வாய்ப்பிருப்பதாக பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர். எதிர்க்கட்சி வரிசையை பொறுத்த வரையில் முதல் வரிசையில் பல்வேறு அரசியல் கட்சிகளை சார்ந்த சட்டமன்ற தலைவர்களே அமர்ந்திருப்பார்கள். அந்த வகையில், காங்கிரஸின்

செல்வபெருந்தகை,  பாமகவின் ஜி.கே.மணி,  பாஜகவின் நயினார் நாகேந்திரன் அமர்ந்திருக்கும் வரிசையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இருக்கை ஒதுக்கப்பட இருப்பதாக

தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் ஓ. பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக இருக்கும் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஐயப்பன் ஆகிய மூன்று எம்.எல்.ஏக்களுக்கும் பின் வரிசையில் தான் இருக்கை ஒதுக்கப்படும் என தெரியவருகிறது.

ஓ.பன்னீர்செல்வம் உட்பட 4 பேரும், தனி அணியாக செயல்பட இருந்தாலும், சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏக்களாக அதே நேரத்தில் தனி அணியாக செயல்படுவார்கள் என மூத்த பத்திரிகையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும்

சட்டமன்ற கட்சித் தலைவர்களுக்கு வழங்கப்படும் மரியாதை ஓ.பன்னீர்செல்வத்திற்கு வழங்கப்படும் எனவும் பேரவையில் விவாதத்தில் பங்கேற்று பேசுவதற்கான வாய்ப்பும் வழங்கப்படும்

எனவும் பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர். ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டி வேண்டிய, மக்களின் பிரச்னைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, உட்கட்சி பிரச்னையிலே அதிக கவனம் செலுத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் இரண்டு அணிகளாக செயல்படப்போகும் உட்கட்சி பிரச்னையை பேரவை வரை எடுத்துச் செல்லாமல், மக்கள் பிரச்னைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதையே குறிக்கோளாக கொண்டு செயல்பட வேண்டும் என்பது அதிமுகவின் அடிப்படை தொண்டர்களின் வேண்டுகோள்.

-விக்னேஷ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஹெலிகாப்டர் விபத்து; சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்டவர் கைது

Arivazhagan Chinnasamy

”தமிழகத்தில் 2 கட்டமாக தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை”- சத்யபிரதா சாகு!

Jayapriya

மாணவர்களுக்கு மடிக்கணினி உடனடியாக வழங்க வேண்டும்: ராமதாஸ்

EZHILARASAN D