குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதையொட்டி, தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் 19 ஆம் தேதி வரை தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், நாளை முதல் 45 கி.மீ முதல் 65 கி.மீ வரை காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க வேண்டாம் எனவும் ஆழ்கடல் மீன்பிடி படகுகளில் உள்ள மீனவர்களைத் தொடர்பு கொண்டு அருகில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் தங்கள் படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில் அனைத்து மண்டல இயக்குநர்களுக்கும் மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளார்.