குவைத்தில் 12,000 பொறியாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு தலையிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், குவைத்தில் 5,000க்கும் மேற்பட்ட தமிழக பொறியாளர்கள் உள்ளிட்ட 12,000 இந்திய பொறியாளர்கள் பணியிழக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. குவைத்தில் பணியாற்றும் இந்திய பொறியாளர்கள் விசா நீட்டிப்பு பெற வேண்டும் என்றால், அதற்கு குவைத் பொறியாளர்கள் சங்கத்திடமிருந்து தடையின்மை சான்றிதழ் பெற வேண்டும் என்று குவைத் அரசு நிபந்தனை விதித்துள்ளது. ஆனால், இந்திய தேசிய அங்கீகார வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்ற இந்திய பொறியாளர்களுக்கு மட்டும் தான் தடையின்மை சான்று வழங்க முடியும் என குவைத் பொறியாளர்கள் சங்கம் கூறுகிறது.
இதனால் இந்தியாவில் ஐஐடி, என்.ஐ.டி, அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் படித்தவர்களால் கூட குவைத் பொறியாளர் சங்கத்தின் தடையின்மை சான்றிதழை பெற முடியவில்லை. இந்தியாவில் தேசிய அங்கீகார வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகளில் படித்தவர்கள் மட்டும் தான் உண்மையான பொறியாளர்கள் என்றும், மற்றவர்கள் போலி பட்டம் பெற்றவர்கள் என்றும் குவைத் கருதுகிறது.
இந்திய அரசால் உருவாக்கப்பட்ட ஏஐசிடிஇ 2010-ஆம் ஆண்டில் தான் தனியாக செயல்படத் தொடங்கியது. இந்தியாவை பொறுத்த வரை பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கு தொழில்நுட்பக் கல்விக் குழுவின் அங்கீகாரம் மட்டுமே கட்டாயம் ஆகும். தேசிய அங்கீகார வாரியத்தின் அங்கீகாரம் இன்று வரை கட்டாயமாக்கப்படவில்லை. 2022-ஆம் ஆண்டு முதல் தான் தேசிய அங்கீகார வாரியத்தின் அங்கீகாரம் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. அதுவும் இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை.
இந்நிலையில் குவைத்தில் 20, 30 ஆண்டுகளாக பணியாற்றி வருபவர்களிடம் தேசிய அங்கீகாரச் சான்று கேட்டால் அவர்களால் தாக்கல் செய்ய முடியாது. அதனால், அவர்கள் வேலையிழப்பது மட்டுமின்றி, கைது செய்யப்பட்டு குடும்பத்துடன் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படும் ஆபத்து உள்ளது.
குவைத்தில் இந்திய பொறியாளர்களின் வேலைவாய்ப்பை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. அதனால், குவைத் அரசுடன் பேசி அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் பட்டம் பெற்ற பொறியாளர்கள் அனைவருக்கும் வேலையும், விசாவும் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். தமிழக பொறியாளர்களும் இதில் பாதிக்கப்படுவர் என்பதால் இது குறித்து மத்திய அரசிடம் தமிழக அரசும் வலியுறுத்த வேண்டும்.







