ஆவிக்காரன்பட்டியில் மீன் பிடித்திருவிழா 35 ஆண்டுகளுக்கு பின் நடைபெறுவதால் பொதுமக்கள் ஆர்வத்தோடு பங்கேற்று மீன் பிடித்தனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பொய்கைப்பட்டி ஊராட்சியில் சுமார் 19 ஏக்கர்
பரப்பளவில் ஆவிக்காரன்பட்டியில் அமைந்துள்ள ஆவிக்குளம் என்னும்
வட்டாவிக்குளத்தில் விடியற்காலை 5.30 மணிக்கு மீன் பிடித்திருவிழா
நடைபெற்றது.
அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்னதாகவே குளக்கரையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். ஆலய வழிபாட்டிற்கு பின் ஊராட்சிமன்ற தலைவர் ரோஸின் சகாயமேரி ராஜசேகர் மற்றும் ஊர் முக்கியஸ்தர் மூக்கையா கவுண்டர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் மீன் பிடி திருவிழாவை துவக்கி வைத்தனர்.
குளக்கரையில் கையில் வலைகளுடன் கூடியிருந்த பொதுமக்கள் துள்ளி குதித்து ஓடி
மீன் பிடிக்க தொடங்கினர். ஜாதி, மதம் பாராமல் அனைவரும் ஒன்று கூடி ஒற்றுமையுடன் நடைபெறும் இந்த மீன்படி திருவிழாவில், சுற்றுவட்டார பகுதி மட்டுமின்றி அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான கிராம பொதுமக்கள் கண்மாயில் குவிந்திருந்தனர்.
பாரம்பரிய முறையில் கண்மாயில் இறங்கிய பொதுமக்கள் ஊத்தா, வலை, கூடை, பரி, கச்சா ஆகியவைகளை கொண்டு மீன் பிடிக்கத்தொடங்கினர். அதில் மீன்பிடித்தவர்கள் கைகளுக்கு நாட்டு வகை மீன்களான விரால், கெளுத்தி, கட்லா, ஜிலேபி, கெண்டை, கொரவை ஆகிய மீன்கள் கிடைத்தன.
கடந்த சில நாட்களாக கண்மாயில் தூண்டில், ஒட்டு வலை போன்றவற்றை பயன்படுத்தி பொதுமக்கள் தொடர்ந்து மீன் பிடித்த வந்ததால் இத்திருவிழாவின்போது
பொதுமக்களுக்கு போதிய மீன் கிடைக்கவில்லை என்றே கூறலாம். இருப்பினும்
குளத்தில் இறங்கியவர்களுக்கு ஏமாற்றமின்றி மீன் கிடைத்தது. 35 ஆண்டுகளுக்கு
பின் நடைபெறும் மீன்பிடி திருவிழா என்பதால் அப்பகுதி மக்கள் மீன் பிடிக்க
ஆர்வமுடன் குளத்தில் இறங்கியுள்ளனர்.







