தலைமன்னார்- தனுஷ்கோடியை நீந்திக்கடக்கும் முதல் மாற்றுத்திறனாளி இளைஞர்

ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக்’ முறையில் இலங்கையின் தலைமன்னார்- தனுஷ்கோடி பாக் நீரிணை கடற்பகுதியை நீந்தி கடந்த முதல் மாற்றுத் திறனாளி என்ற சாதனையை சென்னையைச் சேர்ந்த இளைஞர் நிகழ்த்த உள்ளார் சென்னையைச் சேர்ந்த ராஜசேகரன், வனிதா…

ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக்’ முறையில் இலங்கையின் தலைமன்னார்- தனுஷ்கோடி பாக் நீரிணை கடற்பகுதியை நீந்தி கடந்த முதல் மாற்றுத் திறனாளி என்ற சாதனையை சென்னையைச் சேர்ந்த இளைஞர் நிகழ்த்த உள்ளார்

சென்னையைச் சேர்ந்த ராஜசேகரன், வனிதா தம்பதியரின் மகன் ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸ்(29). இவர் பிறவியிலேய 2 கால்கள், 2 கைகள் செயல்படாத மற்றும் அறிவுத்திறன் குறைந்த, மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி. செரிபரல் பால்ஸி என்ற நோயால் பாதிக்கப்பட்டவர். இவரால் பேசவோ, தானே தனது தேவைகளை பூர்த்தி
செய்யவோ முடியாது.

இருந்தபோதும், இவரது பெற்றோர் இவரை எதாவது ஒன்றில் சாதிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் 4 வயது முதல் நீச்சல் கற்றுக்கொடுக்க தொடங்கினர். இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு தேசிய மாணவர் படை நடத்திய கடலூர்-பாண்டிச்சேரி 5 கி.மீட்டர் தூரம் கடலில் நீந்தி சாதனை படைத்தார். இதற்காக இவருக்கு மத்திய அரசின் சமூக நீதித்துறை, மாற்றுத்திறனாளிகளுக்கான ரோல் மாடல் என்ற தேசிய விருதை வழங்கியது. இவ்விருதை அப்போதைய துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு வழங்கியுள்ளார்.

அதனையடுத்து கடந்த 2022-ம் ஆண்டு தேசிய மாணவர் படை நடத்திய
கடலூர்-பாண்டிச்சேரி 10 கி.மீட்டர் தூரம் கடலில் நீந்தி சாதனை படைத்துள்ளார்.
அப்போதைய முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் பாராட்டி பரிசு வழங்கியுள்ளனர்.
இதுவரை பல்வேறு போட்டிகளில் 40 மெடல்கள் பெற்றுள்ளார்.

இந்நிலையில் ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸ் இலங்கையின் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி
வரையிலான 32 கி.மீட்டர் தூர பாக்ஜலசந்தி கடலை நீந்திக் கடக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி இன்று  தலைமைன்னாரிலிருந்து தொடங்கி, 13-ம் தேதி தனுஷ்கோடியை சென்றடைய திட்டமிட்டுள்ளார்.

இதற்காக ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸ் மற்றும் அவரது பெற்றோர் ராமநாதபுரம் ஆட்சியர் ஜானி டாம்
வர்கீஸை சந்தித்து, வரும் 13-ம் தனுஷ்கோடி வந்து சாதனை நிகழ்ச்சியில்
பங்கேற்குமாறு கேட்டுக்கொண்டனர். பொதுவாக நீந்துபவர்கள் கை, கால்களை அசைத்து
ப்ரீ ஸ்டைல் முறையில் நீந்துவர். ஆனால் இவரால் கை, கால்களை அசைத்து நீந்த
முடியாது என்பதால், நெஞ்சை அசைத்து (ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக் முறையில்) நீந்துபவர்.

ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக் முறையில் தலைமன்னார்- தனுஷ்கோடி கடலை நீந்திக்கடக்கும்
முதல் மாற்றுத்திறனாளி இளைஞர் என்ற கின்னஸ் உலக சாதனை முயற்சி படைக்க உள்ளார். மகனின் பிறப்பு மிகுந்த வருத்தத்தை கொடுத்தாலும் அவரை வைத்து உலக சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தனது குடும்பத்தினர் மாற்றுத்திறனாளியாக இருக்கும் மகனை உலக சாதனை படைக்க எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.