நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இத்தொடரில் இரு அணிகளும் 3 ஒருநாள் மற்றும் 5 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுகின்றன. அதன் படி இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவிற்கு 8 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்களை குவித்துள்ளது.
தொடர்ந்து 301 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் இந்திய அணி 40.4 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் கே.எல். ராகுல் மற்றும் ஹர்ஷத் ராணா ஆகியோர் உள்ளனர். இப்போட்டியில் தொடக்க வீரரான ரோஹித் சர்மா 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து, களமிறங்கிய விராட் கோலி அரைசதம் கடந்து அசத்தினார். தொடர்ந்து ஆடிய அவர் 91 பந்துகளுக்கு 93 ரன்கள் எடுத்த நிலையில் கைலை ஜேமிசன் பந்தில் அவுட் ஆனார். ஆனால் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சச்சின் மற்றும் குமார் சங்ககாரா ஆகியோரின் சாதனைகளை முறியடித்துள்ளார்.
2 ஆவது இடத்தில்………..
இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி 42 ரன்கள் எடுத்தபோது சர்வதேச கிரிக்கெட்டில் 28 ஆயிரத்து 17 ரன்களை எடுத்தார். இதன் மூலம் சங்ககாராவின் சாதனையை முறியடித்து சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த கோலி பட்டியலில் 2வது இடம் பிடித்துள்ளார். முன்னதாக இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்ககாரா 28 ஆயிரத்து 16 ரன்கள் எடுத்து 2வது இடத்தில் இருந்தார். தற்போது அவர் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதே நேரம் 34 ஆயிரத்து 357 ரன்களுடன் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிவேக 28000………….
முன்னதாக விராட் கோலி 26 ரன்கள் எடுத்திருக்கையில், சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 28000 ரன்கள் குவித்த வீரர் என்ற மற்றொரு சாதனையை படைத்தார். சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 28000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தன்வசம் வைத்திருந்தார். அவர் 644 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையைப் படைத்திருந்தார். தற்போது, அவர் இந்த சாதனையை 624 இன்னிங்ஸ்களில் 28000 ரன்களை கடந்து அந்த சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.







