”ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை” – மதுரையில் வைகோ பேட்டி

ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற கருத்தில் தங்களுக்கு உடன்பாடில்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, போதை பொருள் ஒழிப்பு, சாதி, மத மோதல் தடுப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, கடந்த 2-ந்தேதி திருச்சியில் தனது சமத்துவ நடைபயணத்தை  தொடங்கினார். இந்த நடைபயணத்தின் நிறைவு விழா நாளை  மதுரையில் நடக்கிறது. இந்த நிலையில் வைகோ இன்று, உத்தங்குடி பகுதியில் உள்ள தனியார் மகாலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

”சமத்துவ நடைபயணம் கிட்டத்தட்ட 174 கிலோமீட்டர் தூரம் சென்றுள்ளது. நிறைவு பொதுக்கூட்டம் நாளை மதுரையில் நடக்கிறது. இதில், கவிபேரரசு வைரமுத்து, நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகின்றனர்.

போதை பொருள் கட்டுப்படுத்துவது குறித்து, நான் நடைபயணம் அறிவித்த பின்னர்தான், அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் போதைபொருள் பற்றி பேசினார்கள். அரசியலுக்கு வருவதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு. கலை உலகில் இருந்து வருபவர்களுக்கு உரிமை உண்டு. அவர்களை நான் விமர்சிக்கமாட்டோன். அரசியலுக்கு வந்து சாதித்து விடாலம் என்று மணல்கோட்டை கட்டுகிறார்கள். அது எப்போது வேண்டுமானாலும், சரிந்துவிழும்.

வருகிற தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றிபெறும். திமுக தனிபெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைந்து, மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக தமிழகத்தை வழிநடத்துவார் என்பது என் நம்பிக்கை.

ஜனநாயகன் திரைப்படத்தை வெளியிடுவதற்கு எல்லா உரிமையும் உள்ளது. சென்சார் போர்டு எந்த காரணத்திற்காக படத்தை தடுத்து நிறுத்தி உள்ளது என்பதை அவர்கள்தான் விளக்க வேண்டும். எனக்கு சிவாஜிகணேசன், கருணாநிதியின் பராசக்தி படம்தான் தெரியும். தற்போது வந்துள்ள பராசக்தி பற்றி தெரியாது.

பிரதமர் மோடி திருக்குறள், புறநானுறு, பாரதி பாடல்களை இந்தியில் எழுதி வைத்து கொண்டு வாசிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தை கவர நினைக்கிறார். ஆனால், தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்க மறுக்கிறார்.

ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும், எதை பற்றி வேண்டுமானாலும் பேசலாம். அதனால் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும்  பங்கு என பேசுகிறார்கள். ஆனால், அந்த கருத்தில் எங்களுக்கு உடன்பாடில்லை. நாங்கள் அந்த மாதிரியான நிபந்தனைகளை முன்வைக்கவில்லை, வைக்கபோவதும் இல்லை. கூட்டணி பேச்சு வார்த்தை தொடங்கிய பின்னர் எத்தனை தொகுதிகளில் போட்டி என்பதை அறிவிப்போம். அதற்கு தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்படும்” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.