“கருத்து திணிப்புகள் மூலம் மக்கள் மனதை மாற்ற முடியாது”:முதல்வர்

கருத்து திணிப்புகள் மூலம் மக்கள் மனதை மாற்ற முடியாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி,…

கருத்து திணிப்புகள் மூலம் மக்கள் மனதை மாற்ற முடியாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம் ஆகிய இருவரும், கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அதில், தேர்தல் பரப்புரைக்காக செல்லும் இடங்களில் எல்லாம், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அளிக்கும் வரவேற்பு, மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளனர். அதிமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டிருப்பதை தங்களின் அனுபவம் தங்களுக்கு உணர்த்துவதாக தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னர் செல்வம், அதிமுக மீது மக்கள் கொண்டிருக்கும் பேரண்பு, வாக்குகளாக பொழிய இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

பத்திரிகைகளும், ஊடகங்களும் கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில், கருத்து திணிப்பை கையில் எடுத்திருப்பதாகவும், இத்தகைய கருத்துக் கணிப்புகள் கடந்த காலத்தில் முற்றிலும் தவறாகிப் போனது எல்லோரும் அறிந்ததுதானே என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துக் கணிப்பு என்ற பெயரில் நடைபெறும் பொய் பிரச்சாரங்களால், மக்கள் யாரும் அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்துள்ள அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி – ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னர் செல்வம், தொடர் வெற்றிக்கு அனைவரும் தொய்வின்றி உழைப்போம் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.