காட்டுப் பன்றிகளின் நடமாட்டத்தால் விவசாய விளைநிலங்களுக்கும், விவசாயிகளுக்கும் பாதிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ம.தி.மு.க செயலாளர் துரை வைகோ, வனத்துறை அமைச்சர் மதிவேந்தனை நேரில் சந்தித்து புகார் மனு அளித்துள்ளார்.
இது தொடர்பாக மறுமலர்ச்சி திமுக, தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பல ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் காட்டுப் பன்றிகளின் நடமாட்டத்தால் விவசாய விளைநிலங்களுக்கும், விவசாயிகளுக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவற்றை கட்டுப்படுத்தி அழிக்க வலியுறுத்தி மாண்புமிகு தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் சகோதரர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்களை, 09.01.2023 நேற்று, துரை வைகோ அவர்கள் நேரில் சந்தித்து மனு அளித்தார்.
குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் காட்டுப் பன்றிகளின் நடமாட்டத்தால் அந்தப் பகுதி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, 20.12.2022 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களை, ஆயிரக்கணக்கான விவசாயிகளுடன் நேரில் சென்று சந்தித்து கோரிக்கை மனு அளித்திருந்த தகவலையும் மாண்புமிகு அமைச்சரிடம் துரை வைகோ அவர்கள் பகிர்ந்து கொண்டார்.
மேலும், காட்டுப் பன்றிகளின் நடமாட்டத்தால் விவசாய விளைநிலங்களும், விவசாயிகளும் பாதிக்கப்படுவது குறித்து அமைச்சரிடம் விரிவாக எடுத்துரைத்தார். வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972, அட்டவணை 3 இன் கீழ் இருக்கும் காட்டுப் பன்றிகளை அட்டவணை 5 இன் கீழ் இருக்கும் Vermin List இல் கொண்டுவர ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும். அப்போது தான் காட்டுப் பன்றிகளை அழிக்க அரசின் முன் அனுமதி தேவைப்படாது. கடந்த 2016 ஆம் ஆண்டு, காட்டுப் பன்றிகளை தீங்கு விளைவிக்கும் உயிரினமாக அறிவித்து அட்டவணை 5 இன் கீழ் Vermin List இல் கொண்டுவர, உத்தரகாண்ட் மற்றும் பீகார் அரசுகளுக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்து இருந்தது. இந்த அனுமதி ஓராண்டுக்கு மட்டும் தான் வழங்கப்பட்டது.
அதைப்போல, காட்டுப் பன்றிகளை அட்டவணை 5 இன் கீழ் கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சரிடம் வலியுறுத்தினார்.
அதுவரை இடைக்கால தீர்வாக, கேரள அரசைப் போல, தமிழ்நாடு வனத்துறை மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் கொடுத்து கிராமக் குழுக்கள் மூலம் காட்டுப் பன்றிகளை அழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் அவர்களிடம் கேட்டுக் கொண்டார்.
அனைத்து விவரங்களையும் பொறுமையுடன் கேட்டுக் கொண்ட அமைச்சர் அவர்கள், வன விலங்கு சட்ட நடைமுறைகளைப் பார்த்து விட்டு, அரசு அதிகாரிகளிடமும் விவாதித்து உரிய நடவடிக்கையை விரைந்து எடுப்பதாக உறுதியளித்தார்.
கால நிலை மாற்றம் மற்றும் உரம் விலை உயர்வு போன்ற பல்வேறு காரணங்களினால் ஏற்கனவே விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதையும் சுட்டிக்காட்டி விரைந்து நடவடிக்கை எடுக்க அமைச்சரிடம் துரை வைகோ அவர்கள் கேட்டுக் கொண்டார்.
இந்த சந்திப்பின்போது, மாமன்ற உறுப்பினரும் வடசென்னை கிழக்கு மாவட்டச் செயலாளருமான சு.ஜீவன் அவர்கள் உடனிருந்தார்.










